மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் தள்ளுபடி.. பிப்ரவரி 1 அன்று நல்ல செய்தி வருமா.?
ரயில் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் டிக்கெட் தள்ளுபடியை மீண்டும் எதிர்பார்க்கின்றனர். இந்த சலுகை மீண்டும் வருமா என்று காத்திருக்கின்றனர்.

மூத்த குடிமக்கள் ரயில் தள்ளுபடி
2026-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டை நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் எதிர்பார்ப்புடன் வரும் நிலையில், மூத்த குடிமக்கள் குறிப்பாக ரயில் பயணச் சலுகைகள் குறித்து அதிக நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் இந்திய ரயில்வே பயண கட்டணங்களை உயர்த்தியிருப்பது, முதியோர் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.
ரயில் கட்டண உயர்வு
2025 டிசம்பர் 26 முதல், 215 கிலோமீட்டருக்கு மேல் பயணங்களுக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுப் பிரிவில் ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா கூடுதலாகவும், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நான்-ஏசி மற்றும் ஏசி பிரிவுகளில் 2 பைசா கூடுதலாகவும் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் ரூ.600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என ரயில்வே கணக்கிட்டுள்ளது. ஆனால் இந்த உயர்வு, குறிப்பாக நிலையான வருமானம் இல்லாத முதிய பயணிகளுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ரயில் டிக்கெட் சலுகை
முந்தைய காலத்துக்கு முன்பு, மூத்த குடிமக்களுக்கு ரயிலில் பயணிக்க சிறந்த தள்ளுபடி வசதி இருந்தது. 2019 வரை, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40% தள்ளுபடியும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50% தள்ளுபடியும் வழங்கப்பட்டது. ராஜதானி, சதாப்தி, துரந்தோ போன்ற ரயில்களிலும் இந்தச் சலுகை அமலில் இருந்தது. இதனால் நீண்ட தூர பயணம் முடியோருக்கு எளிதாக இருந்தது.
மூத்த குடிமக்கள் எதிர்பார்ப்பு
2020-ல் கொரோனா பரவல் காரணமாக, இந்தச் சலுகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அப்போது பயணிகள் எண்ணிக்கை குறைந்தது, ரயில்வே நிதிநிலை பாதிக்கப்பட்டது காரணமாகக் கூறப்பட்டது. தற்போது நிலைமை மாறியிருந்தாலும், ரயில்கள் மீண்டும் நிரம்பி ஓடினாலும், அந்த சலுகை இதுவரை திரும்ப வழங்கப்படவில்லை. இதுவே முதியோர் மத்தியில் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.
பட்ஜெட் 2026
ஓய்வுக்குப் பிறகு வருமானம் குறைவாக இருக்கும் நிலையில், மருத்துவம், ஆன்மிகப் பயணம், குழந்தைகளை சந்திப்பது போன்ற தேவைகளுக்காக முதியோர் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் உயர்ந்து வரும் கட்டணங்கள் அவர்களுக்கு கூடுதல் சுமையாக மாறுகின்றன. அதனால், பட்ஜெட் 2026 மூலம் ரயில் டிக்கெட் தள்ளுபடி மீண்டும் வழங்கப்படும் என அவர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை நிறைவேறினால், கோடிக்கணக்கான மூத்த குடிமக்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

