- Home
- Business
- FASTag கட்டண உயர்வு.! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.! மார்ச் 31-க்குள் இதை பண்ணிடுங்க.!
FASTag கட்டண உயர்வு.! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.! மார்ச் 31-க்குள் இதை பண்ணிடுங்க.!
FASTag Price Hike from April 01 2026 : இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் FASTag கட்டணத்தை அதிகரிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

FASTag Price Hike from April 01 2026
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டுதோறும் சுங்க கட்டணங்களை மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டவுள்ளது.
ஏப்ரல் 1, 2026 முதல் அமல்
அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் கார் மற்றும் இலகுரக வாகன உரிமையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு சந்தா விலை உயர உள்ளது. பழைய கட்டணம் ரூ.3,000 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.3,075 புதிய கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த ரூ.3,075 கட்டணத்தை செலுத்தினால் ஓராண்டு காலத்திற்குள் அல்லது 200 முறை சுங்கச்சாவடிகளை கடக்கலாம். இது வணிக ரீதி அல்லாத சொந்த உபயோக வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
நெடுஞ்சாலைத்துறை
ஆண்டு சந்தா மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் வழக்கமான பயண கட்டணமும் உயர்த்தப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள 77 சுங்கசாவடிகளில் 60 முதல் 66 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. மொத்த விற்பனை விலை குறியீட்டின் (WPI) அடிப்படையில் ஐந்து சதவீதம் முதல் ஏழு சதவீதம் வரை கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வாகன வகையைப் பொறுத்து ஒருமுறை செல்லும் கட்டணம் ரூ.10 முதல் ரூ.25 வரை அதிகரிக்கப்படும்.
கட்டண உயர்வு ஏன்?
செங்கல்பட்டு (பரனூர்), விக்கிரவாண்டி, ஆத்தூர், ஸ்ரீபெரும்புதூர், கணியூர், சமயபுரம் போன்ற முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இது அமலுக்கு வரும். ஒவ்வொரு ஆண்டும் பண வீக்கத்திற்கு ஏற்ப சுங்க கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் மேம்படுத்துவதற்கான நிதி தேவை, கட்டுமான விலைகளின் உயர்வு மற்றும் இதர செலவுகள் இந்த விலை உயர்வுக்கு காரணம். ஆண்டுதோறும் ஏப்ரல் ஒன்றாம் தேதி மொத்த விற்பனை விலை குறியீட்டின் அடிப்படையில் இந்த உயர்வு கணக்கிடப்படுகிறது.
மார்ச் 31க்குள் விண்ணப்பியுங்கள்
நீங்கள் ஏற்கனவே ஆண்டு சந்தா வைத்திருப்பவர் என்றால் மார்ச் 31க்குள் புதுப்பிப்பதன் மூலம் பழைய விலையிலேயே (ரூ.3,000) பலன்களைப் பெறலாம். உங்கள் FASTag கணக்கில் KYC விவரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கட்டண உயர்வு அமலுக்கு வரும் பொழுது போதிய பேலன்ஸ் இல்லாமல் இருந்து சுங்கச்சாவடியைக் கடந்தால் அபராதம் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆன்லைன் மூலம் FASTag பெறுவது எப்படி?
NHAI வலைதளத்தைப் பயன்படுத்தி FASTag வருடாந்திர பாஸை வாங்க முடியும். அதிகாரப்பூர்வ NHAI வலைதளத்திற்கு செல்லவும். பதிவு செய்யப்பட்ட விபரங்களுடன் லாகின் செய்யவும். வருடாந்திர பாஸ் செக்ஷனை கண்டறியவும். அதில் வாகனம் மற்றும் FASTag விவரங்களை உள்ளிட்டு பணம் செலுத்தவும். பணம் செலுத்திய பிறகு வாகனத்துடன் தொடர்புடைய FASTag-ல் வருடாந்திர பாஸ் ஆக்டிவாகி இருக்கும். அதே போல் ராஜ்மார்க் யாத்ரா ஆப் மூலமாகவும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பயன்படுத்தி லாகின் செய்து, வருடாந்திர பாஸ் செக்ஷனை தேர்ந்தெடுத்து பணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

