- Home
- Business
- டோல் பிளாசா வரிசைக்கு குட்பை.. பிப்ரவரி 1 முதல் புது ரூல்ஸ்.. FASTag விதிகளில் பெரிய மாற்றம்!
டோல் பிளாசா வரிசைக்கு குட்பை.. பிப்ரவரி 1 முதல் புது ரூல்ஸ்.. FASTag விதிகளில் பெரிய மாற்றம்!
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பிப்ரவரி 1 முதல் புதிய மாற்றங்களை அமல்படுத்த உள்ளது. இந்த புதிய மாற்றத்தினால் டோல் பிளாசாக்களில் ஏற்படும் தாமதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் தினமும் பயணம் செய்யும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு முக்கிய நிம்மதி செய்தியை தெரிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 1, 2026 முதல், புதிய கார், ஜீப் மற்றும் வேன் வகை வாகனங்களுக்கு பாஸ்டேக் வழங்குவதில் இருந்து KYV சரிபார்ப்பு நடைமுறை ரத்து செய்யப்பட உள்ளது.
இதுவரை பாஸ்டேக் வாங்கும்போது, KYV சரிபார்ப்பு கட்டாயமாக இருந்தது. இந்த நடைமுறை காரணமாக, பாஸ்டேக் செயல்படுத்தப்பட்ட பின்னரும் பல மணி நேரம் அல்லது நாட்கள் வரை வாகன உரிமையாளர்கள் சிரமத்தை சந்தித்தனர். பலர் டோல் பிளாசாக்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
புதிய மாற்றத்தின் படி, பிப்ரவரி 1க்கு பிறகு வாங்கப்படும் பாஸ்டேக்-களுக்கு KYV சரிபார்ப்பு காலம் இருக்காது. வங்கிகள் முதலில் வாகனத்தின் விவரங்களை அரசு வாகன தரவுத்தளத்தில் சரிபார்க்கும். அந்த விவரங்கள் சரியாக இருந்தால், பாஸ்டேக் உடனடியாக செயல்படுத்தப்படும்.
ஒருவேளை வாகன விவரங்கள் தரவுத்தளத்தில் கிடைக்கவில்லை என்றால், பதிவு சான்று (RC) மூலம் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும். இந்த முழு பொறுப்பும் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கே உண்டு. ஆன்லைன் வழியாக வாங்கப்படும் பாஸ்டேக்-களுக்கும் இதே விதிமுறைகள் பொருந்தும்.
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பாஸ்டேக் வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாகும். எந்தமான புகார் அல்லது தவறான பயன்பாடு இல்லாத பாஸ்டேக்-களுக்கு, மீண்டும் KYV சரிபார்ப்பு தேவையில்லை. தவறான வெளியீடு அல்லது தவறான பயன்பாடு கண்டறியப்பட்டால் மட்டுமே சரிபார்ப்பு நடக்கும்.
ஆனால் KYV நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், வாகன உரிமையாளர்கள் தங்கள் பதிவு விவரங்கள் மற்றும் ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ‘டிஜிட்டல் இந்தியா’ முயற்சியின் ஒரு பகுதியாக பாஸ்டேக் மூலம் தற்போது 98 சதவீத டோல் வசூல் டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது.
பாஸ்டேக் இருப்புத் தொகையை சரியாக பராமரிக்காததால் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால், ஓட்டிகள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். இந்த புதிய மாற்றம், நேரமும் எரிபொருளும் சேமித்து, நெடுஞ்சாலை போக்குவரத்தை மேலும் சீரமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

