- Home
- Business
- வீட்டு விசேஷம், மெடிக்கல் எமர்ஜென்சியா? டக்குனு PF பணத்தை எடுக்கலாம்.. இதுதான் புது லிஸ்ட்!
வீட்டு விசேஷம், மெடிக்கல் எமர்ஜென்சியா? டக்குனு PF பணத்தை எடுக்கலாம்.. இதுதான் புது லிஸ்ட்!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) பிஎஃப் பணம் எடுக்கும் விதிமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது. இப்போது, குறைந்தபட்சம் 12 மாதங்கள் பணிபுரிந்தாலே, மருத்துவ சிகிச்சை, கல்வி, திருமணம் போன்ற தேவைகளுக்கு மொத்த தொகையில் 75% வரை எடுக்கலாம்.

EPFO விதிமுறைகள்
பிஎஃப் பணத்தை எடுப்பது என்பது பலருக்கும் சவாலான காரியமாக இருந்து வந்தது. விதவிதமான விதிமுறைகள், அடிக்கடி நிராகரிக்கப்படும் கோரிக்கைகள் என இருந்த சிரமங்களை போக்க, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) விதிமுறைகளை மொத்தமாக எளிமைப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் அறிவிக்கப்பட்ட இந்த மாற்றங்கள், இப்போது உறுப்பினர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளன.
இப்போது என்ன மாற்றம்?
பழைய முறை: முன்பு பிஎஃப் பணத்தை எடுக்க 13 விதமான பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு தேவைக்கும் 2 முதல் 7 ஆண்டுகள் வரை வேலை பார்த்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. மேலும், ஊழியரின் பங்களிப்பை மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடும் இருந்தது.
புதிய முறை:
• குறைந்தபட்ச பணிக்காலம்: இப்போது எல்லா வகையான தேவைகளுக்கும் வெறும் 12 மாதங்கள் (1 ஆண்டு) வேலை பார்த்திருந்தாலே போதுமானது.
• அதிகப்படியான தொகை: ஊழியரின் பங்களிப்பு மட்டுமின்றி, நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் வட்டி என மொத்த தொகையில் 75% வரை எடுக்கலாம்.
100% பணத்தை எப்போது எடுக்கலாம்?
12 மாதங்கள் வேலையை முடித்த பிறகு, கீழ்க்கண்ட 5 முக்கிய காரணங்களுக்காக தகுதியான தொகையில் 100% வரை எடுக்க அனுமதி உண்டு.
1. மருத்துவ சிகிச்சை: தனக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ சிகிச்சை பெற ஆண்டுக்கு 3 முறை வரை எடுக்கலாம்.
2. கல்வி: சொந்த மேற்படிப்பு அல்லது குழந்தைகளின் படிப்பிற்கு மொத்த பணிக்காலத்தில் 10 முறை வரை எடுக்கலாம்.
3. திருமணம்: தனக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ திருமணம் செய்ய 5 முறை வரை எடுக்கலாம்.
4. வீடு தொடர்பான தேவைகள்: வீடு வாங்குதல், கட்டுதல் அல்லது லோன் அடைக்க 5 முறை வரை அனுமதி.
5. சிறப்பு காரணங்கள்: எந்தக் காரணமும் சொல்லாமல் அவசரத் தேவைக்காக ஆண்டுக்கு 2 முறை பணம் எடுக்கலாம்.
ஏன் 25% பணத்தை EPFO நிறுத்தி வைக்கிறது?
முழுப்பணத்தையும் எடுத்துவிட்டால், ஓய்வுக்காலத்தில் கையில் பணம் இருக்காது என்பதால், பாதுகாப்பிற்காக 25% தொகையை EPFO கணக்கிலேயே வைத்திருக்கும். பிஎஃப் கணக்கிற்கு வழங்கப்படும் 8.25% வட்டி மூலம் உங்கள் பணம் வளர வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
வேலை இழந்தால் என்ன விதிமுறை?
• வேலை இழந்தவுடன் மொத்த இருப்பில் 75% தொகையை உடனடியாக எடுத்துக் கொள்ளலாம்.
• மீதமுள்ள 25% தொகையை ஒரு வருடம் கழித்து எடுத்துக் கொள்ளலாம்.
• ஆனால், 55 வயதிற்குப் பின் ஓய்வு பெறுபவர்கள், உடல் ஊனம் அல்லது நிரந்தரமாக வெளிநாடு செல்பவர்கள் 100% பணத்தையும் முழுமையாக எடுக்க தடையுமில்லை.
பென்ஷன் பணம் பாதிக்கப்படுமா?
பிஎஃப் எடுக்கும் புதிய விதிகள் உங்கள் பென்ஷன் (EPS) திட்டத்தைப் பாதிக்காது. ஆனால், 10 ஆண்டுகள் பணி முடித்தால்தான் மாதந்திர பென்ஷன் கிடைக்கும். அவசரப்பட்டு பென்ஷன் பணத்தை முன்கூட்டியே எடுத்தால், பிற்காலத்தில் கிடைக்க வேண்டிய பலன்களை இழக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

