58% டிஏ உயர்வு மட்டும் போதுமா? 8வது ஊதியக் குழுவுக்கு முன்பே வரப்போகும் குட் நியூஸ்
8வது ஊதியக் குழு தாமதமாகும் நிலையில், 58% அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க அரசு ஊழியர்கள் கோருகின்றனர். இந்த இணைப்பு நடந்தால் பல்வேறு மாற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்திய மத்தியில் தற்போது அதிகமாக பேசப்படும் ஒரு விஷயம் உள்ளது. 8வது ஊதியக் குழு நடைமுறைக்கு முன்பே வரும், தற்போதைய அகவிலைப்படி (டிஏ)-யை அடிப்படை சம்பளத்துடன் (அடிப்படை ஊதியம்) இணைக்க அரசு முடிவு எடுக்குமா என்பதுதான் அது. காரணம், 7வது ஊதியக் குழுவின் கால அவகாசம் டிசம்பர் 31, 2025-ல் முடிந்துவிட்டது. இதனால் ஜனவரி முதல் ஜூன் 2026 காலப்பகுதிக்கான டிஏ உயர்வு, 7வது குழுவின் எல்லைக்கு வெளியே வரும் முதல் திருத்தமாகப் பார்க்கப்படுகிறது.
மற்றொரு பக்கம், 8வது ஊதியக் குழு பணிகள் தொடங்கியிருந்தாலும், அதை நடைமுறைப்படுத்த நேரம் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக ஒரு ஊதியக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க சுமார் 18 மாதங்கள் ஆகும். அதன் பிறகு அந்த பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல், நடைமுறை அமலாக்கம் என கூடுதலாக சில மாதங்கள் தேவை. இதனால் 2027 இறுதிக்கும் முன் பரிந்துரைகள் அமலுக்கு வர வாய்ப்பு குறைவு என ஊழியர் சங்கங்கள் கருதுகின்றன.
அதுவரை இடைக்கால நிவாரணமாக தற்போதுள்ள 58% டிஏ-யை அடிப்படை சம்பளத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இந்த கோரிக்கைக்கு அரசின் பதில் தெளிவாக உள்ளது. டிசம்பர் 2025-ல் பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்ட எழுத்துபூர்வ பதிலில், தற்போது டிஏ-யை அடிப்படை ஊதியம்-க்கு இணைக்கும் முன்மொழிவு பரிசீலனையில் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும், பணவீக்கத்தின் தாக்கத்தை சமாளிக்க AICPI-IW அடிப்படையில் ஒவ்வொரு ஆறு மாதமும் டிஏ/டிஆர் உயர்த்தப்படுவதாகவும், அதுவே போதுமான நிவாரணமாகவும் கூறப்பட்டுள்ளது.
ஊழியர் அமைப்புகள் டிஏ இணைப்பை விரும்புவதற்குக் காரணம், அது சேர்க்கப்பட்டால் அடிப்படை சம்பளம் உயர்ந்து, அதனுடன் HRA, TA போன்ற அலவன்சுகளும் அதிகரிக்கும். ஓய்வூதியம் கணக்கிடுவதிலும் நேரடி பயன் கிடைக்கும் என்பதே அவர்களின் வாதம். 5வது ஊதியக் குழு காலத்தில் டிஏ 50% எட்டியபோது 2004-ல் Basic Pay-க்கு இணைக்கப்பட்ட முன்னுதாரணம் இருந்தாலும், 6வது குழு அதை நிராகரித்தது. தற்போதைய நிலவரப்படி, அரசின் உறுதியான நிலைப்பாட்டால் டிஏ இணைப்பு நடக்கும் வாய்ப்பு குறைவு என்பதே பொதுவான கணிப்பு ஆகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

