2507 விமானங்கள் ரத்து, 3 லட்சம் பயணிகள் பாதிப்பு… இண்டிகோ மீது அரசு எடுத்த அதிரடி முடிவு
டிசம்பர் 2025-ல் ஏற்பட்ட விமான சேவை குழப்பங்களுக்காக இண்டிகோ நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ.22.20 கோடி அபராதம் விதித்துள்ளது. திட்டமிடல் குறைபாடுகள், விதிகளை மீறியது போன்ற காரணங்களுக்காக டிஜிசிஏ இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

இண்டிகோ அபராதம்
டிசம்பர் 2025-ல் நாடு முழுவதும் விமான சேவைகள் பெரும் குழப்பத்தை சந்தித்த விவகாரத்தில் இண்டிகோ மீது மத்திய அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்துள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான டிஜிசிஏ, திட்டமிடல், செயல்பாடு மற்றும் நிர்வாக மேற்பார்வையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இண்டிகோவுக்கு மொத்தம் ரூ.22.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டிஜிசிஏ அதிரடி
டிசம்பர் 3 முதல் 5, 2025 வரையிலான மூன்று நாட்களில் இண்டிகோ விமானங்கள் பெரிய அளவில் ரத்து மற்றும் தாமதம் ஆனது. இந்த நிலையில் 2,507 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், மேலும் 1,852 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம்
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், டிஜிசிஏ நியமித்த 4 பேர் கொண்ட விசாரணைக் குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. அதில், தேவைக்குமேல் செயல்பாடுகளை அதிகப்படுத்தியது, போதிய முன்னேற்பாடுகள் இல்லை, மென்பொருள் அமைப்புகளில் பலவீனம் மற்றும் மேலாண்மை கண்காணிப்பில் குறைபாடு ஆகியவை இந்த நெருக்கடிக்கான முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டன.
3 லட்சம் பயணிகள் பாதிப்பு
மேலும், திருத்தப்பட்ட விமானப் பணி நேர வரம்பு விதிகள் (FDTL) முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் குழு கூறியுள்ளது. இதன் அடிப்படையில் ஆறு வகை CAR விதிமீறல்களுக்காக ரூ.1.80 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு, டிசம்பர் 5, 2025 முதல் பிப்ரவரி 10, 2026 வரை 68 நாட்களுக்கு விதிமுறை மீறியதற்காக ஒரு நாளுக்கு ரூ.30 லட்சம் வீதம் ரூ.20.40 கோடி அபராதமும் சேர்க்கப்பட்டது. இண்டிகோ நிர்வாகம், டிஜிசிஏ உத்தரவுகளை முழுமையாக பின்பற்றி தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்துள்ளது.

