- Home
- Business
- டோல்கேட்களில் நிற்க தேவையில்லை.. சென்னை–பெங்களூரு சாலையில் ஏஐ கேமரா.. பயணிகள் மகிழ்ச்சி.!
டோல்கேட்களில் நிற்க தேவையில்லை.. சென்னை–பெங்களூரு சாலையில் ஏஐ கேமரா.. பயணிகள் மகிழ்ச்சி.!
சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட்களை மாற்றும் MLFF என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிறது. இதனால், வாகனங்கள் நிற்காமல் வேகமாக பயணிக்கலாம், பயண நேரமும் குறையும்.

ஏஐ டோல் சிஸ்டம்
தமிழகத்தில் மற்றும் கர்நாடகாவை இணைக்கும் முக்கியமான சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலை வழிகளில் பெரிய மாற்றம் வருகிறது. இனி டோல்கேட் அருகே வாகனங்கள் நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) MLFF – Multi Lane Free Flow System என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, பழைய டோல்பூத் முறையை மெதுவாக மாற்றத் தொடங்கியுள்ளது.
கேமரா டோல் முறை
இந்த புதிய முறைமையில் AI அடிப்படையிலான ANPR (தானியங்கி எண் தட்டு அங்கீகாரம்) கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இவை வாகன எண்களை தானாகப் பிடித்து, அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது FASTag கணக்கில் இருந்து கட்டணத்தை கழித்துவிடும். இந்த வாகனங்கள் டோல்பூட்டில் நிற்க வேண்டிய அவசியமே இல்லை. வாகனங்கள் 100 முதல் 120 கிமீ வேகத்திலும் இலகுவாக சென்று விடலாம். இதன்மூலம் பயண நேரம் குறைவதோடு, சாலை நெரிசலும் குறையும்.
சென்னை–பெங்களூரு நெடுஞ்சாலை
முதற்கட்டமாக, ஸ்ரீபெரும்புதூர் (நெமிலி), சென்னசமுத்திரம் (வேலூர் அருகே), மற்றும் பாரனூர் (ஜிஎஸ்டி பாதை) ஆகிய மூன்று இடங்களில் இந்த புதிய கேமரா முறை பரிசோதனை அடிப்படையில் தொடங்கப்படுகிறது. இதன் வெற்றியைப் பொருத்து, தமிழகத்தின் மற்ற டோல்கேட்களிலும் அடுத்த கட்டங்களில் இது விரிவுபடுத்தப்படும் என NHAI தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலை ஆணையம்
பயணிகளுக்கு இதனால் பல நன்மைகள் கிடைக்கும். டோல்கேட்களில் நீண்ட வரிசையில் நிற்கும் சலிப்பு மறையும். நேரமும் எரிபொருளும் சேமிக்கப்படும். அதேசமயம், போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் சாலை விபத்துகள் குறையும் என நிபுணர்கள் நம்புகின்றனர். மேலும், மின் கட்டணம் தானாக கழிக்கப்படுவதால் பணம் கொடுத்து பரிமாற்றம் செய்வது அவசியம் இருக்காது.
தானியங்கி கட்டண வசூல்
எனினும், பயணிகள் தங்கள் FASTag கணக்கை புதுப்பித்து, அதில் போதுமான இருப்பு வைத்திருப்பது அவசியம். சில டோல்கேட்களில் தற்போது சோதனை நிலையில் இருப்பதால், சில இடங்களில் பழைய முறை தொடரலாம். இருப்பினும், இது முழுமையாக அமலுக்கு வந்தால், டோல்கேட் இல்லா பயண அனுபவம் தமிழகத்தில் நிஜமாக மாறும். சென்னை–பெங்களூரு பாதையில் இந்த புதிய முறை பயணிகளுக்கு “சீரான போக்குவரத்து – சுலபமான பயணம்” என்கிற புதிய யுகத்தை துவங்குகிறது.