அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!
8வது ஊதியக்குழு தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு சுமார் ஒரு கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் குடும்பங்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

8வது ஊதியக்குழு அப்டேட்
8வது ஊதியக்குழுவைக் குறித்து நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வுபெற்றவர்களும் எதிர்பார்த்திருந்த சிக்கல் தீர்ந்துவிட்டது. மத்திய அமைச்சகம் ராஜ்யசபாவில் அறிவித்ததன் மூலம், சம்பள மாற்றங்களுடன் ஓய்வூதிய திருத்தமும் இந்த குழுவின் பணிக்குள் அடங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2025 நவம்பர் 3ஆம் தேதி முதல் 8வது ஊதியக்குழு அதிகாரப்பூர்வமாக தனது பணியைத் தொடங்கியுள்ளது. டிஏ அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் முன்மொழிவு அரசு முன் இல்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளில் ஓய்வூதியம் சேர்க்கப்பட்டதா என்ற சந்தேகம் அதிகமாக இருந்தது.
மத்திய அரசு ஊழியர்கள்
பல ஊழியர் சங்கங்களும் ஓய்வுபெற்றவர்களின் அமைப்புகளும் இந்தக் கோரிக்கையை அரசிடம் முன்வைத்து வந்தன. இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தும் வகையில் நிதி அமைச்சக உதவி அமைச்சர் பங்கஜ் சௌதரி ராஜ்யசபாவில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்தார். டிஏ 50% தாண்டியதும், அது அடிப்படை ஊதியத்தில் இணைக்கப்படவேண்டும் என்பதே ஊழியர் சங்கங்களின் நீண்டநாள் கோரிக்கை. ஆனால் அரசு இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. அடிப்படை சம்பளத்தில் டிஏ சேர்க்கும் எண்ணம் அரசிடம் இல்லை என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
சம்பள மாற்றம்
எனவே, பழைய சம்பள கணக்கீட்டு முறைமையே தற்காலிகமாக தொடரும். குழு அடுத்த சில மாதங்களில் பொருளாதார நிலை, பணவீக்கம் மற்றும் அரசின் நிதிநிலை ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கையைத் தயாரிக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பள மாற்றம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதிய அமைப்பில் பெரிய மாற்றங்கள் வரலாம். மொத்தத்தில், இந்த அறிவிப்பு ஒரு கோடி குடும்பங்களுக்கு நிம்மதியாக உருவாகியுள்ளது. வருங்காலத்தில் அரசு ஊழியர்களின் பொருளாதார நிலைக்கு மாற்றுப்பாதை உருவாகும் என நம்பப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

