- Home
- Business
- வங்கி வட்டி விகிதங்கள் முதல் கிரெடிட் கார்டு வரை: நவ.1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய விதிகள்!
வங்கி வட்டி விகிதங்கள் முதல் கிரெடிட் கார்டு வரை: நவ.1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய விதிகள்!
நவ. 1-ஆம் தேதி முதல் தனிநபர் நிதி மற்றும் வரி விதிப்பு சார்ந்த 5 முக்கியமான விதிகளில் மாற்றங்கள் வரவுள்ளன. ஓய்வூதியதாரர்கள் நவ. 30-க்குள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

நவ.1 முதல் மாறும் விதிகள்
வங்கி வட்டி விகிதங்கள் முதல் கிரெடிட் கார்டு மற்றும் வருமான வரித்துறை வரை, வரவிருக்கும் நவ. 1-ஆம் தேதி முதல் நிதித்துறை சார்ந்த 5 முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. தனிநபர் நிதி முதல் வரி விதிப்புகள் வரை பல விஷயங்களில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன.
எனவே, நீங்கள் ஓய்வூதியம் பெறுபவராக இருந்தால், வங்கியில் ஃபிக்ஸ்டு டெபாசிட் (FD) செய்யத் திட்டமிட்டால் அல்லது எல்பிஜி (LPG) சிலிண்டர் பயன்படுத்துபவராக இருந்தால், இந்த மாற்றங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு செயல்படுவது மிகவும் அவசியமாகும். நவ. 1 முதல் மாற்றங்கள் ஏற்படும் அந்த 5 முக்கியமான விதிகளின் விவரங்களை பற்றி பார்போம்.
ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (Digital Life Certificate)
ஓய்வூதியதாரர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் தங்களின் வருடாந்திர டிஜிட்டல் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் அவகாசம் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஓய்வூதியதாரர்கள் நவ. 1 முதல் நவ. 30-ஆம் தேதிக்குள் தங்களது டிஜிட்டல் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.
வருமான வரி தாக்கல் (ITR) காலக்கெடு
வணிகர்கள், நிறுவனங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தக் காலக்கெடு அக். 31-லிருந்து நவ. 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரியைத் தாக்கல் செய்யாவிட்டால், நிலுவையில் உள்ள வரிக்கு வட்டி விதிக்கப்படும்; மேலும், நடப்பு நிதியாண்டில் ஏற்படும் இழப்புகளை அடுத்தடுத்த ஆண்டிற்கு எடுத்துச் செல்லும் உரிமையையும் இழக்க நேரிடும்.
எல்பிஜி (LPG) சிலிண்டர் விலை மறுபரிசீலனை
நவ.1 முதல் வீட்டு உபயோகம் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர்களின் புதிய விலைகள் அறிவிக்கப்பட உள்ளன. வணிகப் பயன்பாட்டுச் சிலிண்டரின் விலை உயர்ந்தால் ஹோட்டல்களில் உணவுகளின் விலை உயரக்கூடும். அதேசமயம், வீட்டு உபயோகச் சிலிண்டரின் விலை மாறும்போது அது குடும்ப வரவு-செலவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
வங்கிகளின் சிறப்பு எஃப்டி (Special FD) காலக்கெடு
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வங்கிகள் அறிமுகப்படுத்திய சிறப்பு ஃபிக்ஸ்டு டெபாசிட் (FD) திட்டங்கள் நவம்பர் மாதத்துடன் நிறைவடைகின்றன. எனவே, நவ. 1-ஆம் தேதிக்குப் பிறகு வங்கிகளில் எஃப்டி செய்ய விரும்பினால், சம்பந்தப்பட்ட வங்கி அந்தச் சிறப்பு எஃப்டி திட்டத்தின் காலத்தை நீட்டித்துள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை சிறப்பு வட்டித் திட்டம் நீட்டிக்கப்படவில்லை என்றால், வழக்கமான குறைந்த வட்டி விகிதமே கிடைக்கும்.
கிரெடிட் கார்டு விதிகள் (Credit Card Rules)
நவ.1-ஆம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பயன்பாட்டுச் சேவைகளுக்கான கட்டணங்களை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும்போது, குறிப்பிட்ட வரம்பைத் தாண்டினால் 1% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், குறிப்பிட்ட சேவைகளுக்கான ரிவார்டு புள்ளிகளின் வரம்பும் குறைக்கப்படும். எனவே, கிரெடிட் கார்டு பயனாளர்கள் இந்த விதி மாற்றங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியமாகும்.
சுருக்கமாக, நிதி சார்ந்த சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக பயனாளர்கள் இந்த ஐந்து முக்கியமான மாற்றங்களையும் தெளிவாகத் தெரிந்து கொண்டு அதற்கேற்பத் திட்டமிடுவது மிகவும் முக்கியமாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.





