- Home
- Business
- ரூ.30 லட்சம் கோடி சந்தை மதிப்பு.. டாடாவை பின்னுக்கு தள்ளிய அம்பானி.. நம்பர் 1 பிசினஸ் குரூப் ஆனது ரிலையன்ஸ்!
ரூ.30 லட்சம் கோடி சந்தை மதிப்பு.. டாடாவை பின்னுக்கு தள்ளிய அம்பானி.. நம்பர் 1 பிசினஸ் குரூப் ஆனது ரிலையன்ஸ்!
Reliance Beats Tata: அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் டாடா குழுமத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, 30 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் ரிலையன்ஸ் இந்தியாவின் முதன்மை வணிகக் குழுமமாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

டாடாவை பின்னுக்கு தள்ளிய அம்பானி
இந்தியப் பங்குச்சந்தையில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. டாடா குழுமத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, 30 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் ரிலையன்ஸ் இந்தியாவின் முதன்மை வணிகக் குழுமமாக உருவெடுத்துள்ளது. டெலிகாம் ஜாம்பவானான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், பங்குச்சந்தையில் 21.36% லாபத்துடன் கம்பீரமாக நுழைந்திருக்கிறது.
ஜியோவின் ஒரு பங்கு 1538 ரூபாய்க்கு பட்டியலாகியுள்ளது. இது 1119 ரூபாய் என்ற ஐபிஓ விலையை விட 21.36% அதிகம். இதன் மூலம், தேசிய பங்குச்சந்தையில் (NSE) ஜியோவின் சந்தை மதிப்பு 12,50,586.39 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தை முந்தி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது அதிக மதிப்புள்ள நிறுவனமாக ஜியோ மாறியிருக்கிறது.
இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட டாடா குழுமம்
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, டாடா குழுமம் 25.51 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. பிசினஸ் டுடே ஏஸ் ஈக்விட்டி (Business Today Ace Equity) அறிக்கையின்படி, அதானி குழுமம் ஒரு நாளுக்கு முன்பு 16.68 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பைக் கொண்டிருந்தது.
பங்குச்சந்தையில் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்த ஜியோ, மூன்று தரகு நிறுவனங்கள் (brokerage firms) கணித்திருந்த 12 மாத இலக்கை ஒரே நாளில் எட்டியிருக்கிறது. MOFSL நிறுவனம் இன்று காலையிலேயே ஜியோ பங்குகளை வாங்கலாம் எனப் பரிந்துரைத்திருந்தது. 2029 நிதியாண்டின் லாபத்தைக் கணக்கிட்டு, ஒரு பங்குக்கு 1,350 ரூபாய் என இலக்கு நிர்ணயித்திருந்தது.
பங்கு விலை உயர வாய்ப்பு
ஐபிஓ விலையை வைத்துப் பார்த்தால், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் மதிப்பு பார்தி ஏர்டெல் இந்தியாவின் மதிப்புக்குச் சமமாக இருந்தது. ஆனால், சந்தையில் ஜியோ தான் முதலிடத்தில் இருக்கிறது என்பதால், விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் அவர்களிடம் உள்ளது. அதனால் ஏர்டெல்லை விட அதிக விலைக்கு ஜியோ பங்குகள் வர்த்தகமாகும் என MOFSL கணித்திருந்தது. மற்ற தரகு நிறுவனங்களும் இந்தப் பங்கை வாங்கச் சொல்லியே பரிந்துரைக்கின்றன.
ஜியோ வெறும் சந்தை முன்னணி நிறுவனம் மட்டுமல்ல, புதிய சந்தையையே உருவாக்கிய நிறுவனம் என நிபுணர்கள் சொல்கிறார்கள். Nomura மற்றும் Elara Securities நிறுவனங்களும் ஜியோ பங்குகளை வாங்கலாம் என அறிவுறுத்தியுள்ளன. இவர்களின் கணிப்புப்படி, பங்கு விலை இன்னும் 20 முதல் 22% வரை உயர வாய்ப்பிருக்கிறது. Nomura நிறுவனம் 1,340 ரூபாய் இலக்கு கொடுத்திருந்தது. இது 1,119 ரூபாய் என்ற ஐபிஓ விலையை விட 20% அதிகம். முன்னதாக, கிரே மார்க்கெட்டில் ஜியோ பங்கு 247 ரூபாய் பிரீமியத்தில் வர்த்தகமானது. இதை வைத்தே பட்டியலாகும் நாளில் 22% லாபம் கிடைக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர்.
ஒரு பங்குக்கு எவ்வளவு மாற்றம் நிகழும்?
மோதிலால் ஓஸ்வால் அறிக்கையின்படி, ஜியோவின் வருமானமும் மதிப்பும் வயர்லெஸ் ARPU (ஒரு வாடிக்கையாளரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருமானம்) வளர்ச்சியைப் பொறுத்தே இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் வயர்லெஸ் ARPU-வில் ஏற்படும் 10 ரூபாய் மாற்றம், ஜியோவின் ஒட்டுமொத்த EBITDA-வில் 3800 முதல் 3900 கோடி ரூபாய் வரை மாற்றத்தை ஏற்படுத்தும். அதாவது ஒரு பங்குக்கு 58 ரூபாய் அல்லது 4% வரை மாற்றம் நிகழலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.




