- Home
- Business
- 'ரூ.25 லட்சத்துக்கு பாலிசி எடுத்தும் வெறும் ரூ.5 லட்சம்தான் தந்தாங்க'... இன்சூரன்ஸ் கம்பெனிகள் சொல்லாத அதிர்ச்சி ரகசியம்!
'ரூ.25 லட்சத்துக்கு பாலிசி எடுத்தும் வெறும் ரூ.5 லட்சம்தான் தந்தாங்க'... இன்சூரன்ஸ் கம்பெனிகள் சொல்லாத அதிர்ச்சி ரகசியம்!
ரூ.25 லட்சம் காப்பீட்டுத் தொகை கொண்ட ஒருவருக்கு ரூ.12 லட்சம் மருத்துவமனை பில் வந்தபோது, நிறுவனம் ‘நியாயமான மற்றும் வழக்கமான கட்டணங்கள்’, பிற விலக்குகளைக் காரணம் காட்டி வெறும் ரூ.5 லட்சத்தை மட்டுமே வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மருத்துவ பில்லில் கைவைக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
என்கிட்டதான் ரூ.25 லட்சத்துக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டு இருக்கே... மருத்துவமனை பில் எவ்வளவு வந்தாலும் இன்சூரன்ஸ் பாத்துக்கப்போகுது என்று நீங்க நிம்மதியாக இருந்தால், கொஞ்சம் நில்லுங்க. சமீபத்தில் நடந்த உண்மைச் சம்பவம் ஒட்டுமொத்த பாலிசிதாரர்களையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ஒரு பாலிசிதாரர் எடுத்திருந்த காப்பீட்டுத் தொகை (Sum Insured) முழுதாக ரூ.25 லட்சம். அவருக்கு மருத்துவமனையில் ஆன மொத்த செலவு ரூ.12 லட்சம். காப்பீட்டு வரம்பை விட பில் தொகை பாதிக்கும் கீழேதான் இருக்கிறது. ஆனாலும் இன்சூரன்ஸ் நிறுவனம் செட்டில் செய்த தொகை வெறும் ரூ.5 லட்சம்தான். மீதி ரூ.7 லட்சத்தை அந்த நோயாளி தன் சொந்தக் கைக்காசைப் போட்டே செலுத்த வேண்டியதாகிவிட்டது. காப்பீட்டு வரம்பிற்குள் இருந்தும் ரூ.7 லட்சத்தை அபேஸ் செய்தது எப்படி? அதற்குப் பின்னணியில் இருக்கும் அந்த 'மர்ம விதிமுறை' என்ன? விரிவாகப் பார்ப்போம்.
மருத்துவ பில்லில் கத்திரி போடும் 'ரீசனபிள் & கஸ்டமரி சார்ஜஸ்'
இன்சூரன்ஸ் பாலிசி பத்திரத்தின் சிறிய எழுத்துக்களில் ஒளிந்திருக்கும் ஒரு விநோதமான விதிதான் ‘நியாயமான மற்றும் வழக்கமான கட்டணங்கள்’ (Reasonable and Customary Charges). இதுகுறித்து காப்பீட்டுத் துறை நிபுணர் நிகில் ஜா கூறுகையில், இந்தியாவில் ஒவ்வொரு மருத்துவ சிகிச்சைக்குமான கட்டணங்களை நிர்ணயிக்க எந்தவொரு ஒழுங்குமுறை ஆணையமும் நிலையான விலைப்பட்டியலை வைத்திருக்கவில்லை. இதனால் ஒரே சிகிச்சைக்கு வெவ்வேறு மருத்துவமனைகள் வெவ்வேறு கட்டணங்களை வசூலிக்கின்றன. மருத்துவமனைகள் இஷ்டத்திற்கு பில் போடுவதைத் தடுக்கவே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்த விதியை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன என்கிறார்.
அதாவது, குறிப்பிட்ட பகுதியில் ஒரு சிகிச்சைக்கு சராசரியாக என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அதை மட்டுமே காப்பீட்டு நிறுவனம் ‘நியாயமானது’ என ஏற்கும். உதாரணமாக, அறுவை சிகிச்சைக்கு உங்க மருத்துவமனை ரூ.1 லட்சம், உபகரணங்களுக்கு ரூ.50,000, பரிசோதனைக்கு ரூ.20,000 என பில் போடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதே ஏரியாவில் உள்ள மற்ற ஆஸ்பத்திரிகளில் இந்த சிகிச்சைக்கு ரூ.50,000 தான் சராசரி என்றால், உங்க ஆஸ்பத்திரி வாங்கியது கூடுதல் கட்டணம் என்று கூறி மீதிப் பணத்தை நிறுவனம் வெட்டிவிடும்.
பிடிபட்ட அந்த ரூ.7 லட்சம், எதற்கெல்லாம் கத்திரி போட்டார்கள் தெரியுமா?
மேலே குறிப்பிட்ட அந்தச் சம்பவத்தில், நிறுவனம் மருத்துவமனை பில்லில் போட்ட பிடித்தங்களின் அதிர்ச்சிப் பட்டியல் இதோ!
அறுவை சிகிச்சை நிபுணர் கட்டணம்: டாக்டர் கேட்டதில் ரூ.1,12,230 பிடித்தம் (காரணம்: நியாயமான கட்டண வரம்பை மீறியது).
மயக்க மருந்து நிபுணர் கட்டணம்: மருத்துவர் கட்டணத்தில் 35% மட்டுமே தரப்படும் என ரூ.76,570 பிடித்தம்.
அளவுகோல் ஒப்பீடு: மற்ற மருத்துவமனைகளை விட உங்க பில் அதிகம் என்று சொல்லி ரூ.3,07,100 மொத்தமாகப் பிடித்தம்.
மருத்துவ நுகர்பொருட்கள் (Consumables): பாலிசியில் இதெல்லாம் சேராது என்று ரூ.29,040 அவுட்.
கூடுதல் கட்டணம்: நியாயமான கட்டண வரம்பு விதியின் கீழ் மீண்டும் ஒரு ரூ.9,500 பிடித்தம்.
இதன் காரணமாக ரூ.12 லட்சம் பில்லில் ரூ.7 லட்சம் காணாமல் போய், நோயாளிக்குக் கிடைத்தது வெறும் ரூ.5 லட்சம்தான்.
ரூ.25 லட்சம் பாலிசி எடுத்தால் ரூ.25 லட்சமும் முழுசா வராதா?
நிச்சயமாக வராது. ரூ.25 லட்சம் என்பது அந்த பாலிசியின் கீழ் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதிகபட்சமாகப் பெறக்கூடிய ஒரு வரம்பு மட்டுமே. இதில் அறை வாடகை வரம்புகள் (Room-rent limits), இணை கட்டணம் (Co-payment), கழிக்கத்தக்க தொகை (Deductibles), பாலிசி விலக்குகள் (Exclusions)
இந்த ‘நியாயமான கட்டண வரம்பு’ ஆகிய தடைகளைத் தாண்டியே உங்களுக்குப் பணம் வந்து சேரும். எனவே, பில் தொகை பாலிசி வரம்புக்குள் இருந்தாலே முழுப் பணமும் கிடைத்துவிடும் என நினைப்பது மிகப்பெரிய தவறு.
உங்களுக்கும் இப்படி நடந்தால் என்ன செய்ய வேண்டும்?
சும்மா விடாதீர்கள், விளக்கம் கேளுங்கள்:
உங்க க்ளைமில் நியாயமற்ற பிடித்தம் செய்யப்பட்டால், எந்தக் கட்டணம் அதிகம்னு சொன்னீங்க? நியாயமான கட்டணம்னு எதன் அடிப்படையில் முடிவு செஞ்சீங்க? எந்த பாலிசி விதியின் கீழ் பிடித்தம் செய்தீர்கள்? என்று எழுத்துப்பூர்வ ஆதாரத்தைக் கேளுங்கள்.
நம்பகமான நிறுவனம் & மருத்துவமனை: நல்ல க்ளைம் செட்டில்மென்ட் விகிதம் (CSR) உள்ள நிறுவனத்தையும், ஒளிவுமறைவற்ற வெளிப்படையான கட்டணங்களை வசூலிக்கும் நெட்வொர்க் மருத்துவமனைகளையும் தேர்வு செய்யுங்கள்.
திறமையான ஆலோசகர்: க்ளைமில் அநியாயமாகப் பிடித்தம் நடக்கும்போது உங்களுக்காகக் காப்பீட்டு ஒம்புட்ஸ்மேன் (Ombudsman) வரை சென்று போராடக்கூடிய ஒரு அனுபவம் வாய்ந்த ஏஜென்ட் அல்லது ஆலோசகரின் துணை மிக அவசியம்.
அதிகத் தொகைக்கு பாலிசி எடுத்துவிட்டோம் என்ற அலட்சியம் வேண்டாம்; பாலிசி எடுக்கும் போதே அதன் உள்ளே இருக்கும் நிபந்தனைகளையும், இந்த ‘ரீசனபிள் அண்ட் கஸ்டமரி சார்ஜஸ்’ விதிகளையும் தெளிவாகப் படித்துப் புரிந்துகொள்வதே அவசர காலத்தில் உங்கள் பணத்தைக் காப்பாற்றும்!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

