- Home
- Business
- ரூ. 250 முதலீட்டில் சேமிப்பு: தாத்தா-பாட்டியும் பணம் செலுத்தக் கூடிய என்.பி.எஸ் வாத்ஸல்யா திட்டம்; விதிமுறை என்ன?
ரூ. 250 முதலீட்டில் சேமிப்பு: தாத்தா-பாட்டியும் பணம் செலுத்தக் கூடிய என்.பி.எஸ் வாத்ஸல்யா திட்டம்; விதிமுறை என்ன?
பேரக்குழந்தைகளுக்குப் பரிசளிக்க சூப்பர் திட்டம். NPS Vatsalya கணக்கில் தாத்தா-பாட்டி & உறவினர்கள் பணம் செலுத்தலாம் - PFRDA புதிய விதிகளை பற்றி பார்போம்.

என்.பி.எஸ் வாத்ஸல்யா திட்டத்தின் புதிய விதிகள்
பெற்றோர்கள் மட்டுமின்றி தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்கள் அனைவரும் சிறுவர்களுக்கான 'NPS Vatsalya' பென்ஷன் கணக்கில் பரிசாகப் பணம் செலுத்தலாம் என்று பென்ஷன் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தெளிவுபடுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் புதிய விதிகளின்படி, குழந்தைகள் எதிர்காலத்தில் பெரிய நிதியைச் சேமிக்க இந்த வசதி பெரிதும் உதவியாக இருக்கும்.
'NPS Vatsalya' திட்ட வழிகாட்டுதல்கள் பிப். 23, 2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்தக் கணக்கு குழந்தையின் பெயரில் திறக்கப்படும், மேலும் குழந்தையே இதன் உரிமையாளராகவும் (Subscriber & Beneficiary) இருப்பார். குழந்தை வயதுக்கு வரும் (18 வயது) வரை பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் மட்டுமே இக்கணக்கை இயக்க முடியும். புதிய விதிகளின்படி, பெற்றோரை தவிர வேறு நபர்களும் இந்தக் கணக்கில் பணம் செலுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். எனினும், பணம் செலுத்தும் உறவினர்களுக்கு அந்தக் கணக்கைக் கட்டுப்படுத்தும் உரிமை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
யார் பணம் செலுத்தலாம்? யார் இயக்கலாம்?
பணம் செலுத்துபவர்கள்: பெற்றோர், பாதுகாவலர்கள், தாத்தா-பாட்டி, மற்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என யார் வேண்டுமானாலும் இந்தக் கணக்கில் பங்களிக்கலாம். உதாரணமாக, தாத்தா-பாட்டி தங்கள் பேரக்குழந்தைகளின் பிறந்தநாள் அல்லது குடும்ப விழாக்களின்போது அவர்களுக்குப் பரிசாக இந்தக் கணக்கில் பணம் செலுத்தலாம். இதற்கு அவர்கள் குழந்தையின் சட்டப்பூர்வ பாதுகாவலராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
கணக்கை இயக்குபவர்கள் - தாத்தா-பாட்டி கணக்கிற்குப் பணம் செலுத்தினாலும், அவர்கள் கணக்கை இயக்கும் உரிமையைப் பெற மாட்டார்கள். குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மட்டுமே கணக்கை நிர்வகிக்க முடியும்.
எவ்வளவு பணம் செலுத்தலாம்?
கணக்கைத் தொடங்க குறைந்தபட்சம் ரூ. 250 செலுத்த வேண்டும். அதேபோல் ஆண்டுக்கு குறைந்தபட்ச பங்களிப்பும் ரூ. 250 ஆகும். அதிகபட்ச வரம்பு அல்லது ஒரு நிதிய ஆண்டில் எத்தனை முறை பணம் செலுத்தலாம் என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
உதாரணமாக, தாத்தா-பாட்டி பிறந்தநாளுக்கு ரூ. 10,000 மற்றும் ஆண்டின் பிற்பகுதியில் ரூ. 5,000 எனத் தனித்தனியாகச் செலுத்தலாம். பிற உறவினர்களும் இதே கணக்கில் பங்களிக்கலாம். இவை அனைத்தும் சேர்ந்து குழந்தையின் ஒட்டுமொத்த NPS Vatsalya நிதியை அதிகரிக்கும். PFRDA-இன் பதிவு செய்யப்பட்ட PoP (Points of Presence) ஆன்லைன் வசதிகள், eNPS தளம், யூ.பி.ஐ ஆப்கள் மற்றும் பிற மின்னணு முறைகள் மூலம் பணம் செலுத்தலாம்.
பணம் யாருக்குச் சொந்தம்?
பணம் செலுத்தும் நபருக்கு அந்தத் தொகையின் மீது எந்த உரிமையும் இல்லை. சிறுவரே இதன் முழுமையான பயனாளி ஆவார். இந்த முதலீடுகள் PFRDA-வால் பதிவு செய்யப்பட்ட பென்ஷன் நிதி மூலம் நிர்வகிக்கப்படுகின்றன, மேலும் இதன் லாபம் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறும் (Market-linked). எனவே இது நிலையான வட்டி வழங்கும் வங்கி டெபாசிட் அல்ல.
பணத்தை எடுக்கும் விதி - கணக்கு தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, கல்வி, மருத்துவம் மற்றும் குறிப்பிட்ட இயலாமை போன்ற அவசரத் தேவைகளுக்காகச் சொந்தப் பங்களிப்பில் இருந்து 25% வரை பகுதி தொகையை எடுக்க அனுமதி உண்டு.
குழந்தைக்கு 18 வயது ஆன பிறகு என்ன நடக்கும்?
சிறுவர் தனது 18-வது வயதை எட்டியதும், புதிய KYC நடைமுறைகள் முடிக்கப்பட வேண்டும். அதன்பிறகு குழந்தைக்கு 21 வயது ஆகும் வரை இதே கணக்கைத் தொடரலாம் அல்லது திரண்ட தொகையை வழக்கமான NPS Tier I கணக்கிற்கு மாற்றலாம் அல்லது விதிகளுக்கு உட்பட்டு பெற்றுக் கொள்ளலாம். கணக்கைப் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் மட்டுமே நிர்வகிப்பார்கள்; ஆனால் தாத்தா-பாட்டி மற்றும் உறவினர்கள் பரிசாகப் பணம் செலுத்தி குழந்தையின் எதிர்காலச் சேமிப்பை உயர்த்த இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

