தீபாவளிக்கு பிறகு கார் விலை குறையுமா? அல்லது இப்போதே வாங்கலாமா?
மத்திய அரசு ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம் செய்யத் தயாராகி வருவதால், 4 மீட்டருக்குள் இருக்கும் ஹாட்ச்பேக் மற்றும் சிறிய கார்களின் விலைகள் தீபாவளிக்கு முன்னர் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார் விலை ஜிஎஸ்டி தாக்கம்
மத்திய அரசு ஜி.எஸ்.டி (ஜிஎஸ்டி) விகிதங்களில் பெரிய மாற்றத்தை செய்ய தயாராகி வருகிறது. இதனால் கார் வாங்க விரும்புவோருக்கு நேரடி நன்மை கிடைக்கும். குறிப்பாக 4 மீட்டருக்குள் இருக்கும் ஹாட்ச்பேக் மற்றும் சிறிய கார்களின் விலைகள் தீபாவளிக்கு முன்னர் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கார் வாங்க நினைப்பவர்களுக்கு இது முக்கியமான செய்தியாகும்.
ஜிஎஸ்டி மாற்றம்
சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, வரி அமைப்பை எளிமைப்படுத்தி மக்களுக்கு நன்மை தரும் வகையில் மாற்றப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து வாகன விலையில் மாற்றம் வரும் என்ற பேச்சு வேகமெடுத்து வருகிறது. ஆகவே, தீபாவளி கார் வாங்க சிறந்த நேரமாக மாறக்கூடும். தற்போது 28% ஜி.எஸ்.டி.க்கு மேல் சிறிய கார்கள் மீது கூடுதல் செஸ் வரி விதிக்கப்படுகிறது. இதனால் மொத்த வரி சுமார் 29% ஆகிறது.
தீபாவளி கார் சலுகை
இதுவே கார்களின் விலையை உயரச் செய்கிறது. புதிய முன்மொழிவின்படி, 4 மீட்டருக்குள் நீளமுள்ள, 1200cc-க்கு உட்பட்ட ஹாட்ச்பேக் மற்றும் காம்பாக்ட் கார்கள் 18% ஜி.எஸ்.டி. வரி பிரிவுக்குள் கொண்டு வரப்படலாம். இந்த மாற்றம் அமல்படுத்தப்பட்டால், ஹாட்ச்பேக் மற்றும் காம்பாக்ட் கார்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சுமார் 10-11% வரை விலைக் குறைவு கிடைக்கும்.
கார் வாங்க சிறந்த நேரம்
இதனால் தீபாவளிக்காலத்தில் கார் வாங்குபவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை செலவுச் சுமை குறைய வாய்ப்பு உள்ளது. முதல்முறை கார் வாங்குபவர்களுக்கும், குறைந்த பட்ஜெட்டில் உள்ளவர்களுக்கும் இது ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும். ஆனால் SUV மற்றும் லக்ஷூரி கார்கள் குறித்து பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை.
ஜிஎஸ்டி திருத்தம்
தற்போது இவை 43% முதல் 50% வரை வரி விதிப்பில் உள்ளன. புதிய முன்மொழிவில் அதிகபட்சம் 40% வரை குறைக்கலாம் என்ற பேச்சு நடக்கிறது. அதனால் இவ்வகை வாகனங்களில் நன்மை குறைவாக இருக்கும். ஆனால் தீபாவளி காலத்தில் கார் நிறுவனங்களின் சிறப்பு சலுகைகளும், ரூ.1 லட்சம் வரை தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன. எனவே சலுகைகளையும், ஜி.எஸ்.டி குறைப்பையும் சேர்த்து பார்க்கும்போது, தீபாவளிக்காலம் கார் வாங்க சிறந்த நேரமாகும்.