100 கி.மீ மைலேஜ் கொடுக்கும் KTM எலக்ட்ரிக் பைக்
KTM நிறுவனத்தின் முதல் மின்சார பைக் ஆஸ்திரியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. Duke மாடலை அடிப்படையாகக் கொண்ட இந்த E-Duke, நவீன வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வரவுள்ளது.

KTM Electric Bike
உலகளவில் இருசக்கர வாகன நிறுவனங்கள் அனைத்தும் மின்சார வாகனப் பிரிவில் கால் பதித்து, மின்சார ஸ்கூட்டர்களை வெளியிட்டு வருகின்றன. பல நிறுவனங்கள் இப்போது மின்சார மோட்டார் சைக்கிள்களில் கவனம் செலுத்துகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பிரீமியம் இருசக்கர வாகன பிராண்டான KTM மின்சார பைக்கை வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
புதிய கேடிஎம் பைக்
இது குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. KTM-ன் முதல் மின்சார பைக் ஆஸ்திரியாவில் சோதனை நிலையில் உள்ளதாகத் தெரிகிறது. இது KTM-ன் பிரபலமான மாடல் Duke-ஐ அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. இதனால் KTM E-Duke விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேடிஎம் எலக்ட்ரிக் பைக்
KTM தனது முதல் மின்சார மோட்டார் சைக்கிளை நவீன டிசைனுடன் அறிமுகப்படுத்துகிறது. நிறுவனத்தின் சிக்னேச்சர் வண்ண விருப்பத்திலும் இது வரும். புதிய சப் ஃப்ரேம், கூர்மையான பாடிவொர்க், மேம்படுத்தப்பட்ட ஹெட்லேம்ப் டிசைன், மோட்டோஜிபி-யில் இருந்து ஈர்க்கப்பட்ட ஏர் ஸ்கூப், கூல் 3D பிரிண்டட் சீட் போன்ற தோற்றங்களுடன் இது வரும் எனத் தெரிகிறது.
இ-டியூக் பைக் அம்சங்கள்
இந்த பைக்கில் 5.5 kWh கொள்ளளவு கொண்ட பேட்டரி வழங்கப்படும் எனத் தெரிகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ தூரம் வரை தொடர்ந்து பயணிக்கலாம். E-Duke-ல் 10kW பவர் கொண்ட மின்சார மோட்டார் இருக்கும். இருப்பினும், இதன் பவர் லெவல், செயல்திறன் குறித்த தெளிவான தகவல் இல்லை. வேகமான சார்ஜிங், ஒருங்கிணைந்த சார்ஜிங் கேபிள், அகலமான ஹேண்டில்பார், 4.3 இன்ச் TFT டிஸ்ப்ளே போன்ற பல அம்சங்கள் இருக்கும் எனத் தெரிகிறது.
பஜாஜ் ஆட்டோ உதவி
நிதி நெருக்கடியில் இருந்து மீள பஜாஜ் ஆட்டோ சமீபத்தில் KTM-க்கு உதவியது. இது இந்திய மற்றும் உலக இருசக்கர வாகன சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே, எதிர்காலத்தில் KTM மின்சார பைக் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட வாய்ப்புள்ளது.