- Home
- Auto
- Top 5 Selling Car: ஜூன் 2026 கார் விற்பனையில் யார் நம்பர் 1.? டாப் 5 நிறுவனங்களின் முழு பட்டியல் இதோ
Top 5 Selling Car: ஜூன் 2026 கார் விற்பனையில் யார் நம்பர் 1.? டாப் 5 நிறுவனங்களின் முழு பட்டியல் இதோ
Top 5 Selling Car: ஜூன் 2026-ல் இந்திய கார் சந்தையில் விற்பனை 4 லட்சத்தை கடந்துள்ளது. எந்த நிறுவனம் முதலிடம் பிடித்தது, யாருக்கு சரிவு ஏற்பட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

டாப் 5 கார் நிறுவனங்கள்
இந்திய கார் சந்தை ஜூன் 2026-ல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்தது. புதியதாக வெளியான விற்பனை புள்ளிவிவரங்களின்படி, பயணிகள் வாகனங்களின் விற்பனை 4 லட்சம் யூனிட்டுகளை கடந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சுமார் 3.21 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ஏற்பட்ட உயர்வு கார் சந்தையில் மீண்டும் வலுவான தேவை உருவாகியிருப்பதைக் காட்டுகிறது. குறிப்பாக எஸ்யூவி, சிஎன்ஜி மற்றும் மின்சார வாகனங்களுக்கு வாங்குபவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
மாருதி சுசுகி
இந்த பட்டியலில் வழக்கம்போல மாருதி சுசுகி முதலிடத்தை தக்க வைத்துள்ளது. ஜூன் 2026-ல் நிறுவனம் 1,47,187 வாகனங்களை விற்பனை செய்து சுமார் 45 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. மொத்த விற்பனையில் சுமார் 42 சதவீதம் சிஎன்ஜி மாடல்கள் என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும். மேலும், புதிய இ-விட்டாரா மின்சார எஸ்யூவி மாடலும் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்று, சுமார் 2,000 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன.
டாடா மோட்டார்ஸ்
இரண்டாவது இடத்தை டாடா மோட்டார்ஸ் பிடித்துள்ளது. ஜூன் மாதத்தில் 62,000 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்த நிறுவனம், கடந்த ஆண்டைவிட 67.39 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதில் மின்சார வாகனங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதத்தில் மட்டும் 14,800 மின்சார கார்கள் விற்பனையானது, இந்திய மின்சார கார் சந்தையில் டாடாவின் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மஹிந்திரா
மூன்றாவது இடத்தில் மஹிந்திரா & மஹிந்திரா உள்ளது. இது நிறுவனத்தின் எஸ்யூவி மாடல்களுக்கு தொடர்ந்து அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜூன் மாத விற்பனை 27 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற சந்தைகளில் எஸ்யூவி மாடல்களுக்கு நிலையான தேவை தொடர்கிறது.
ஹூண்டாய்
மறுபுறம், ஹூண்டாய் மோட்டார் இந்தியா மட்டும் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. ஜூன் 2026-ல் நிறுவனம் 39,635 வாகனங்களை விற்பனை செய்தது. உதிரிபாகங்களை வழங்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 14,000 வாகனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டதே இந்த சரிவுக்கான முக்கிய காரணமாக நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
டொயோட்டா
இதற்கிடையில், டொயோட்டா நிறுவனம் 28,000-க்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து முதல் ஐந்து இடங்களில் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக எஸ்யூவி மாடல்களுக்கு கிடைத்துள்ள வலுவான வரவேற்பு, நிறுவனத்தின் விற்பனையை அதிகரித்துள்ளது. ஜூன் 2026 விற்பனை புள்ளிவிவரங்கள், இந்திய கார் சந்தையில் வாங்குபவர்களின் நம்பிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதையும், சிஎன்ஜி மற்றும் மின்சார வாகனங்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதையும் வெளிப்படுத்துகின்றன.

