55 எச்பி பவர், 743 சிசி எஞ்சின்: கரடுமுரடான சாலைகளை கலக்க வரும் ஹிமாலயன் 750!
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது. நவ.27 முதல் முன்பதிவு தொடக்கம். 743சிசி எஞ்சின், விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி பார்போம்.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 வெளியீடு
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய ஹிமாலயன் 750 பைக் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அட்வென்ச்சர் டூரர் பைக், கோவாவில் நடைபெறவுள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டோவர்ஸ் 2026 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனால் பைக் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வரும் 27 முதல் 29 ஆகிய நாட்களில் மோட்டோவர்ஸ் நிகழ்ச்சி கோவாவில் நடைபெறவுள்ளது. இதில் ஹிமாலயன் 750 பைக்கின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதுடன், வரும் 27ஆம் தேதி முதல் முன்பதிவுகளும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் புதிய பைக்குகளை முன்கூட்டியே முன்பதிவு செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
புதிய 743 சிசி எஞ்சின்
இந்த பைக்குகளில் புதிய 743 சிசி பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஹிமாலயன் 450 மாடலில் ஒற்றை சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்ட நிலையில், புதிய மாடலில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் இடம்பெறுகிறது. இது நீண்ட தூரப் பயணங்களுக்கு அதிக செயல்திறனை வழங்கும்.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 55 எச்பி பவரையும், 63 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதில் 90% டார்க் திறன் 3,500 ஆர்பிஎம் அளவிலேயே கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் நெடுஞ்சாலை பயணங்கள் மட்டுமின்றி, மலைப்பாதைகளிலும் சிறப்பான செயல்பாட்டை எதிர்பார்க்கலாம்.
இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 2 இன் 1 சைலென்சர் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வேகங்களில் சிறப்பான டார்க்கை வழங்கும் வகையில் எஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பயணத்தின்போது அடிக்கடி கியர்களை மாற்ற வேண்டிய தேவையும் குறைய வாய்ப்புள்ளது.
சஸ்பென்ஷன் & பிரேக்கிங் வசதிகள்
ஹிமாலயன் 750 பைக்கின் முன்புறம் 43 மிமீ ஷோவா அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவை முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வசதியைக் கொண்டுள்ளன. பின்புறத்தில் ஷோவா மோனோஷாக் சஸ்பென்ஷன் இடம்பெற்றுள்ளது. சாலையின் தன்மைக்கு ஏற்ப சஸ்பென்ஷனை மாற்றியமைக்கலாம்.
பிரேக்கிங்கை பொறுத்தவரையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இந்த புதிய பைக்கில் முதல் முறையாக முன்புறத்தில் 2 டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறத்திலும் டிஸ்க் பிரேக் உள்ளது. மேலும், ஸ்விட்ச் செய்யக்கூடிய டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் பாதுகாப்பான பயணத்திற்கு உதவுகிறது.
அட்வென்ச்சர் பயண அம்சங்கள்
இந்த பைக்கில் 19 அங்குல முன்புற வீலும், 17 இன்ச் பின்புற வீலும் வழங்கப்பட்டுள்ளன. அலாய் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் ஸ்போக் வீல்கள் என 2 தேர்வுகள் கிடைக்கும். மேலும், 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளதால் கரடுமுரடான சாலைகளிலும் பயணிக்க ஏற்றதாக இருக்கும்.
இந்த பைக்குகின் 17.8 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இடம்பெற்றுள்ளது. இதன் சீட் உயரம் 815 மிமீ ஆகவும், மொத்த எடை 224 கிலோவாகவும் உள்ளது. நீண்ட தூரப் பயணங்களின்போது எரிபொருள் நிரப்புவதற்கான இடைவெளியைக் குறைக்க பெரிய டேங்க் உதவியாக இருக்கும். புதிய ஹிமாலயன் 750 பைக்குகளில் 5 ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. ரோடு, ரோடு ஸ்போர்ட், ரெயின், டிரெயில் மற்றும் கஸ்டம் ஆகியவை இதில் அடங்கும். மேலும், க்ரூஸ் கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
இதில் 4 இன்ச் வட்ட வடிவ டிஎஃப்டி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. புளூடூத் மற்றும் வைஃபை இணைப்பு, நேவிகேஷன், போன் கட்டுப்பாடு உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. மேலும், 2 டைப் சி யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று 27 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது.
விலை விவரங்கள்
ஹிமாலயன் 750 பைக் 5 கலர்களில் விற்பனைக்கு வரவுள்ளது. அண்டார்டிக் சில்வர், சைபீரியா ஒயிட், வைக்கிங் பிரான்ஸ், அஸ்டெக் கிரீன் மற்றும் டெக்டோனிக் பிளாக் ஆகியவை இதில் அடங்கும். ஆன்டார்டிக் சில்வர் வேரியண்ட்டில் கூடுதல் டூரிங் ஆக்சஸெரீஸ்களும் இடம்பெறுகின்றன.
இந்தியாவில் இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.3.79 லட்சமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாப் வேரியண்ட் விலை ரூ.4.73 லட்சம் வரை இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், வரும் 27ஆம் தேதி மோட்டோவர்ஸ் நிகழ்ச்சியில்தான் உண்மையான விலை அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.













