253 யூனிட்கள் மட்டுமே விற்பனை.. ஜீப் இந்தியா விற்பனை ஏன் இவ்வளவு குறைவு?
நவம்பர் 2025-ல் ஜீப் இந்தியா வெறும் 253 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது, இது அதன் சந்தை நிலையை கேள்விக்குள்ளாக்குகிறது. இந்த சரிவுக்கு ஜீப்பின் சந்தை நிலை பலவீனமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.

ஜீப் இந்தியா விற்பனை
இந்திய வாகன சந்தையில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான கார்கள் விற்பனையாகும் சூழலில், 2025 நவம்பர் மாதம் ஜீப் இந்தியாவுக்கு சாதகமாக அமையவில்லை. வலுவான பிராண்ட் பெயர் மற்றும் ஆஃப்-ரோடு அடையாளம் கொண்ட எஸ்யூவிகள் இருந்தும், ஜீப்பின் விற்பனை எண்ணிக்கை எதிர்பார்ப்பை எட்டவில்லை. அந்த மாதத்தில் ஜீப் இந்தியாவின் மொத்த விற்பனை வெறும் 253 யூனிட்கள் மட்டுமே. இது இந்தியாவில் முன்னணி மற்றும் நடுத்தர எஸ்யூவி பிராண்டுகள் பதிவு செய்யும் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, ஜீப்பின் சந்தை நிலை பலவீனமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.
மாடல் வாரியான விற்பனை விவரங்களைப் பார்க்கும் போது, ஜீப் காம்பஸ் தான் அதிக விற்பனையுடன் முன்னிலையில் உள்ளது. நவம்பர் மாதத்தில் கம்பஸ் 157 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து ஜீப் மெரிடியன் 63 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. அதே நேரத்தில், ஜீப் ரேங்லர் 19 யூனிட்களும், ஜீப் கிராண்ட் செரோக்கி 14 யூனிட்களும் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இதனால், ஜீப்பின் விற்பனை பெரும்பாலும் காம்பஸைச் சார்ந்தே இருப்பது, மற்ற மாடல்கள் குறிப்பிட்ட வாடிக்கையாளர் வட்டத்திற்கு மட்டுமே தேவை என்பது தெளிவாகிறது.
ஜீப் காம்பஸ்
தற்போது ஜீப் இந்தியா தனது வரிசையில் நான்கு எஸ்யூவி மாடல்களை மட்டுமே வழங்கி வருகிறது. இவை அனைத்தும் பல்வேறு விலை பிரிவுகளில் இருந்தாலும், மொத்த விற்பனை தொடர்ந்து 300 யூனிட்கள் கீழே இருப்பது நிறுவனத்திற்கு சவாலான நிலையை உருவாக்குகிறது. குறிப்பாக டாடா, மஹிந்திரா, ஹூண்டாய், மாருதி போன்ற நிறுவனங்கள் இதே எஸ்யூவி வகை வாகனங்களை விற்பனை செய்யும் நிலையில், ஜீப்பின் இந்த எண்ணிக்கை கவனிக்கத்தக்கதாக உள்ளது.
கடந்த ஆறு மாதங்களின் விற்பனைப் போக்கை ஆராய்ந்தால், ஜீப்புக்கு பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை என்பது தெரிகிறது. மாதந்தோறும் சிறிய ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், கனிசமான வளர்ச்சி பதிவாகவில்லை. அதிக விலை, குறைந்த மாடல் தேர்வுகள், சர்வீஸ் நெட்வொர்க் குறைவு மற்றும் பராமரிப்பு செலவு போன்றவை விற்பனை குறைவுக்கான முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. மேலும், அதிக அம்சங்கள் கொண்ட மலிவு விலை எஸ்யூவிகளை இந்திய வாடிக்கையாளர்கள் விரும்புவது, ஜீப்புக்கு கூடுதல் சவாலாக மாறியுள்ளது.

