விவசாயிகள் குஷியோ குஷி.! 80% மானியம்- சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
தமிழக அரசு விவசாயிகளுக்கு 80% மானியத்தில் சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 5 முதல் 10 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள், 5 ஆண்டுகள் இலவச பராமரிப்பு வழங்கப்படுகின்றன.

விவசாயிகளுக்கான திட்டங்கள்
விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளார்கள். விவசாய தான் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் விவசாயிகளுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மானிய உதவி திட்டங்கள், கடன் உதவி திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. தற்போது 80% மானியத்தில் பம்பு செட்டுகள் அமைக்கும் வகையில் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில் முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் மானியத் திட்டம் தமிழ்நாடு அரசு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் மானியத் திட்டம்
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், விவசாயிகளின் பாசனத் தேவைகளுக்கு தடையற்ற மின்சார வசதியை உறுதி செய்வதாகும். இதன் மூலம், மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாத, தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை 70% முதல் 90% வரை மானியத்தில் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 80% அளவிற்கு மானியம் வழங்கப்படுகிறது.
பொதுப்பிரிவைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 70% மானியமமும், இதர விவசாயிகளுக்கு 60% மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. 5 HP திறன் கொண்ட இயந்திரம் 3,14,088 ரூபாய்க்கும், 7.5 HP திறன் கொண்ட இயந்திரம் - 4,42,113 ரூபாய்க்கும், 10 HP திறன் கொண்ட மோட்டார் 5,41,347 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 முதல் 10 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள்
இந்த திட்டமானது மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சார்பில் 30% மற்றும் மாநில அரசு 40% நிதி உதவி வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், 5 முதல் 10 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் வழங்கப்படுகின்றன.
பம்பு செட்டுகளுக்கு 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு மற்றும் காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் முதல் தவணையாக 2,000 பம்பு செட்டுகளுக்கு ரூ.43.556 கோடி மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
தகுதி என்ன.?
ஏற்கனவே கிணறு அமைத்து, மின் இணைப்பு இல்லாமல் டீசல் என்ஜின் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகள்.
புதிய கிணறு அமைப்பவர்கள், அரசு வரையறுத்த நிலநீர் பாதுகாப்பு குறுவட்டங்களில் மட்டுமே பயன்பெற முடியும்.
பம்பு செட்டை நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்து பயன்படுத்த உறுதிமொழி அளிக்க வேண்டும்.
இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்கள், மின் இணைப்பு பெறும்போது பம்பு செட்டை மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கு சம்மதக் கடிதம் வழங்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்: உழவன் செயலி, https://pmkusum.tn.gov.in அல்லது https://aed.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
நேரில்: அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அல்லது மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை நகல்
புகைப்படம்
சொந்த நிலத்திற்கான சிட்டா மற்றும் அடங்கல்
ஆதிதிராவிடர்/பழங்குடியினர் விவசாயிகளுக்கு: சாதிச் சான்றிதழ் மற்றும் சிறு/குறு விவசாயி சான்றிதழ் நகல்