Russia - Ukraine crisis:கால்பந்து உலக கோப்பையில் கலந்துகொள்ள ரஷ்யாவிற்கு தடை! சாட்டையை சுழற்றிய ஃபிஃபா அமைப்பு
உக்ரைன் மீது போரில் ஈடுபட்டுவரும் ரஷ்யா, கால்பந்து உலக கோப்பை தொடரில் கலந்துகொள்ள ஃபிஃபா அமைப்பு தடை விதித்துள்ளது.
2022ம் ஆண்டு கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் நடத்தப்படுகிறது. 2022ம் ஆண்டு கால்பந்து உலக கோப்பை கத்தாரில் நடத்தப்படும் என்று 2010ம் ஆண்டே அறிவித்துவிட்டது ஃபிஃபா.
கத்தாரில் தோஹாவை சுற்றியுள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த ஆண்டு நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டிகள் நடக்கவுள்ளன.
இந்நிலையில், இந்த கால்பந்து உலக கோப்பையில் கலந்துகொள்ள ரஷ்யாவிற்கு தடை விதித்துள்ளது ஃபிஃபா அமைப்பு. உக்ரைன் மீது போரில் ஈடுபட்டுவரும் ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஃபிஃபா அமைப்பு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சர்வதேச கால்பந்து போட்டிகளில் ஆட ஃபிஃபா அமைப்பு ரஷ்யாவிற்கு தடைவிதித்துள்ள நிலையில், ஐரோப்பிய கால்பந்து அமைப்பான யு.இ.எஃப்.ஏ அமைப்பும் ரஷ்யாவிற்கு தடை விதித்துள்ளது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை ஃபிஃபா அமைப்பு நடத்திவருகிறது. ஃபிஃபா 21வது கால்பந்து உலக கோப்பை தொடர் 2018ம் ஆண்டு ரஷ்யாவில் தான் நடத்தப்பட்டது. அந்த உலக கோப்பையில் ஃப்ரான்ஸ் அணி கோப்பையை வென்றது. கடந்த கால்பந்து உலக கோப்பை ரஷ்யாவில் நடத்தப்பட்ட நிலையில், இந்த முறை கால்பந்து உலக கோப்பையில் கலந்துகொள்ளக்கூட முடியாத நிலையில், ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.