FIFA World Cup 2022:செமயா ஆடிய சவுதி அரேபியா.. மெஸ்ஸியை தவிர யாருமே கோல் அடிக்கல! அர்ஜெண்டினா அதிர்ச்சி தோல்வி
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடரில் சவுதி அரேபியாவிடம் அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் கடந்த 20ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் கத்தாரை வீழ்த்தி ஈகுவடார் அணி வெற்றி பெற்றது. நேற்று நடந்த 2 போட்டிகளில் ஈரானை வீழ்த்தி இங்கிலாந்தும், செனகலை வீழ்த்தி நெதர்லாந்தும் வெற்றி பெற்றன.
இன்று 3 போட்டிகள் நடக்கின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் க்ரூப் சி-யில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினாவும் சவுதி அரேபியாவும் மோதின.
FIFA World Cup 2022: முதல் கோல் அடித்து அக்கவுண்ட்டை தொடங்கினார் லியோனல் மெஸ்ஸி
சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸிக்கு இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், சவுதிக்கு எதிரான ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலை அடித்து இந்த உலக கோப்பையில் தனது கோல் கணக்கை தொடங்கினார் லியோனல் மெஸ்ஸி.
ஆனால் அதன்பின்னர் அர்ஜெண்டினா அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால் ஆட்டத்தின் 2ம் பாதியில் சவுதி அணி 2 கோல்களை அடித்தது.
2ம் பாதி தொடங்கியதுமே ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் சவுதி வீரர் அல்ஷெரி கோல் அடிக்க, 54வது நிமிடத்தில் அல்டவ்சராய் அடுத்த கோலை அடித்தார். சவுதி 2-1 என முன்னிலை வகித்தது. அதன்பின்னர் அர்ஜெண்டினா வீரர்கள் எவ்வளவோ தீவிரமாக கோல் அடிக்க முயற்சித்தும், சவுதி அணி அதற்கு அனுமதிக்கவில்லை.
சவுதி அரேபியா கோல்கீப்பர் அலொவைஸ் அபாரமாக செயல்பட்டு அர்ஜெண்டினாவின் முயற்சிகளை தடுத்தார். எனவே கடைசியாக 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றது.
லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி இந்த முறை ஃபிஃபா உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றமத்தையும் அளித்தது.