FIFA World Cup: பரபரப்பான ஃபைனலில் 2 நிமிடத்தில் 2 கோல்கள் அடித்து ஆட்டத்தை புரட்டிப்போட்ட எம்பாப்பே
ஃபிஃபா உலக கோப்பை ஃபைனல் முதல் பாதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா 2 கோல்கள் அடிக்க, 2ம் பாதி ஆட்டத்தில் ஃபிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே 2 கோல்கள் அடித்து அசத்த, 2-2 என ஆட்டம் சமனடைந்ததால் அரைமணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை ஃபைனல் இன்று நடந்துவருகிறது. அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் இடையேயான ஃபைனல் ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. தொடக்கம் முதலே கோல் அடிக்க மிகத்தீவிரமாக முயற்சித்த அர்ஜெண்டினா அணி முதல் பாதி ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்தன.
ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்ஸி கோல் அடிக்க, அடுத்த 13வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என அர்ஜெண்டினா முன்னிலை வகித்தது.
2ம் பாதி ஆட்டத்தில் ஃபிரான்ஸ் அணி கோலுக்காக கடுமையாக முயற்சித்தது. ஆனால் 2ம் பாதி ஆட்டத்தின் முதல் அரைமணி நேரத்தில் கோல் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஃபிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே கோல் அடித்து கணக்கை தொடங்கினார். பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்த அடுத்த நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்தார் எம்பாப்பே. 2 நிமிடங்களில் எம்பாப்பே 2 கோல்கள் அடிக்க, ஆட்ட முடிவில் 2-2 என டிராவானது.
இதையடுத்து போட்டியின் முடிவை தீர்மானிக்க கூடுதலாக அரைமணி நேரம் வழங்கப்பட்டுள்ளது.