FIFA World Cup 2022: ஓரங்கட்டப்படும் ரொனால்டோ.. கெரியர் ஓவர்..? போர்ச்சுகல் அணியின் துணிச்சல் முடிவு
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் தென்கொரியா அணிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காலிறுதி போட்டியிலும் அவர் ஆடமாட்டார் என்று தெரிகிறது.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களான ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் அவர்கள் மீதும் போர்ச்சுகல் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதற்கேற்றபடியே, ரசிகர்களை ஏமாற்றாமல் போர்ச்சுகல், அர்ஜெண்டினா, பிரேசில், ஃபிரான்ஸ் ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. இங்கிலாந்து, நெதர்லாந்து, மொராக்கோ, குரோஷியா ஆகிய அணிகளும் காலிறுதிக்கு முன்னேறின.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போர்ச்சுகல் அணி சுவிட்சர்லாந்தை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியின் முதல் பாதியில் ரொனால்டோ ஆடவில்லை. சமகாலத்தின் தலைசிறந்த வீரரான ரொனால்டோவை அந்த அணி நிர்வாகம் பென்ச்சில் உட்காரவைத்தது கால்பந்து உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஃபிஃபா உலக கோப்பைகளில் முதல் முறையாக ரொனால்டோ களத்தில் இறக்கப்படாமல் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டார். இது அந்த அணி நிர்வாகத்தின் மிகக்கடினமான முடிவு. ஆனால் அந்த முடிவு பலனளித்தது.
ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ராமோஸ் என்ற வீரர் 3 கோல்களை அடித்து அசத்தினார். ராமோஸ் அபாரமாக ஆடியதால், மொராக்கோவிற்கு எதிரான காலிறுதி போட்டியிலும் ரொனால்டோ ஆடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தென்கொரியாவிற்கு எதிரான போட்டியில் ரொனால்டோ ஒரு சில தவறுகளை செய்தார். எந்த விளையாட்டாக இருந்தாலும், பெரிய வீரர்கள் தவறு செய்தாலும் அவர்களை அணியிலிருந்து நீக்க துணியமாட்டார்கள். ஆனால் போர்ச்சுகல் அணி மிகத்துணிச்சலாக ரொனால்டோவை உட்காரவைத்தது.
அவருக்கு பதிலாக ஆடிய ராமோஸும் அபாரமாக ஆடி 3 கோல்களை அடிக்க, ரொனால்டோ அடுத்த போட்டியில் ஆடுவதும் சிக்கலாகியுள்ளது. போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் ஃபெர்னாண்டோ சாண்டோஸின் பேச்சும் அதையேதான் வெளிப்படுத்துகிறது.
இதுகுறித்து பேசிய சாண்டோஸ், ரொனால்டோவுக்கும் எனக்கும் இடையே நல்ல உறவு இருந்துவருகிறது. அவரது 19 வயதிலிருந்தே எனக்கு அவரை தெரியும். பயிற்சியாளருக்கும் வீரருக்கும் இடையேயான விஷயங்களை நல்ல புரிதலுடன் கூடிய உறவு இருக்கிறது. மொராக்கோவிற்கு எதிரான காலிறுதி போட்டி மிகக்கடினமானது. அந்த போட்டியில் ரொனால்டோ முதலில் ஆடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் சாண்டோஸ்.