FIFA World Cup 2022: காயத்தால் க்ரூப் போட்டிகளிலிருந்து விலகிய நெய்மர்.. பிரேசில் அணிக்கு மரண அடி
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடரில் செர்பியாவுக்கு எதிரான போட்டியில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் க்ரூப் சுற்றில் மற்ற போட்டிகளில் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் கடந்த 20ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அர்ஜெண்டினா மற்றும் ஜெர்மனி ஆகிய 2 பெரிய அணிகள் முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தன.
பிரேசில், இங்கிலாந்து, போர்ச்சுகல், ஃபிரான்ஸ் ஆகிய அணிகள் முதல் போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றன. இந்த முறை கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றான பிரேசில் அணி அதன் முதல் போட்டியில் செர்பியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
க்ரூப் ஜி-யில் உள்ள பிரேசில் வரும் 28ம் தேதி நடக்கும் அடுத்த போட்டியில் சுவிட்சர்லாந்தையும், டிசம்பர் 3ம் தேதி கேம்ரூன் அணியையும் எதிர்கொள்கிறது. இந்நிலையில், செர்பியாவுக்கு எதிரான போட்டியில் ஆடும்போது கணுக்காலில் காயமடைந்த பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர், அடுத்த 2 போட்டிகளிலும் ஆடமாட்டார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
நெய்மர் ஆடாதது பிரேசில் அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். இந்த 2 போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றால்தான் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறமுடியும் என்பதால், இந்த முக்கியமான போட்டிகளில் நெய்மர் ஆடாதது பிரேசில் அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.