ஐ.எஸ்.எல் கால்பந்து லீக் தொடரின் ஆறாவது சீசனின் இறுதி போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும் சென்னையின் எஃப்சி அணியும் மோதின. இரு அணிகளுமே ஏற்கனவே இரண்டு முறை டைட்டிலை வென்ற அணிகள். இரு அணிகளும் மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கின. 

கோவா நேரு ஸ்டேடியத்தில் போட்டி நடந்தது. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி வீரர் ரஃபேல் கிரிவெல்லாரொ கார்னரில் இருந்து கொடுத்த க்ராஸை பெற்ற லூசியன் கோயன் கோலை நோக்கி அடித்தார். ஆனால் பந்து இடது புறம் விலகிச்சென்றதால் கோல் மிஸ்ஸானது. 

ஆனால் ஆட்டத்தின் பத்தாவது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஜேவியர் ஹெர்னாண்டஸ் கோல் அடித்தார். இதையடுத்து 1-0 என முன்னிலை பெற்றது கொல்கத்தா அணி. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி வீரர் சாங்டே, கோலை நோக்கி அடித்த பந்து, கோல் ஆகாமல் தடுக்கப்பட்டது. அதன்பின்னர் 27வது நிமிடத்தில் வால்ஸ்கிஸின் கோல் அடிக்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. 

ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் இருந்து தொடர்ச்சியாக முயற்சி செய்த சென்னை அணியால் முதல் பாதி முழுவதும் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது. ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் கொல்கத்தா அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் டேவிட் வில்லியம்ஸின் உதவியுடன் பந்தை பெற்ற எட்வர்டோ கார்சியா கோல் அடிக்க, கொல்கத்தா அணி 2-0 என முன்னிலை வகித்தது. அதன்பின்னர் சென்னை அணி ஒரு கோலும் கொல்கத்தா அணி ஒரு கோலும் அடித்தது. மொத்தமாக 3 கோல்களை அடித்த கொல்கத்தா அணி, 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது. 

ஏற்கனவே 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் ஐ.எஸ்.எல் டைட்டிலை வென்றிருந்த கொல்கத்தா அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது.