கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பின், திமுகவில் சரி - அதிமுகவில், புதிய தலைமை பதவிக்கு வந்தவர்கள், தங்களின் ஆளுமையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். இந்த நெருக்கடிக்கு மத்தியில் வாரிசுகள், பழைய முக்கிய புள்ளிகள் மற்றும்  புதுமுகங்களுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளனர். ஜெயலலிதா இருந்தபோது, சட்டசபை, லோக்சபா தேர்தல்களின் போது, வசதி படைத்தவர், முக்கிய நிர்வாகிகளின் வாரிசு என்று பார்க்காமல், புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து, வியப்பில் ஆழ்த்துவார்.  அடிமட்ட தொண்டரையும், எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களாக ஆக்கிய பெருமை, அவருக்கு இருந்தது. திமுகவில் கருணாநிதி உறவினர்கள், முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளுக்கு, தேர்தலில் போட்டியிட முக்கியத்துவம் வழங்கப்படும்.

கடந்த 2014  நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக, 40 இடங்களில், தனித்து போட்டியிட்டது. அதில், ஜெயலலிதா அறிவித்த, பாதிக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், புதியவர்கள். திமுக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டன. இறுதியில், 37 இடங்களில், அதிமுக வென்று, லோக்சபாவில், 3வது பெரியகட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. ஜெயலலிதா மறைந்ததை அடுத்து ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் தலைமை ஏற்றுள்ளனர். கருணாநிதி மறைவால், திமுக தலைவராக, ஸ்டாலின் உள்ளார்.

இரு கட்சிகளும், புதிய தலைமையின் கீழ், முதல் லோக்சபா தேர்தலை சந்திக்கின்றன. இந்த தேர்தலில் வென்று, தங்களின் ஆளுமையை, கட்சி தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதிமுக பிஜேபி மெகா கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்கிறது. இதனால், 20 தொகுதிகளை கூட்டணிக்கு கொடுத்துவிட்டு, மிச்சமிருக்கும் 20 தொகுதிகளில் அதிமுக போட்டி யிடுகிறது. இது போக சட்டசபை இடைத்தேர்தலில் மொத்தமாக களமிறங்க உள்ளது.

ஆட்சி அதிகாரம், பண பலம், மெகா கூட்டணி போன்ற வலிமையுடன் களமிறங்குவதால், எளிதில் வெற்றி பெறலாம் என, அதிமுகவினர் கருதுகின்றனர்.இதனால், தேர்தலில் போட்டியிட, சீட் கேட்டு, அமைச்சர்களின் வாரிசுகள், MPக்கள், மாவட்ட செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலருக்கும் இடையில் பலத்த போட்டி நிலவியது. ஆனால் ஆறு பேருக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய, 14 பேரும் புதுமுகங்கள். கூட்டணி கட்சிகளுக்கு, 20 இடங்கள் ஒதுக்கியதால், அந்த தொகுதிகளில், 2014ல், அதிமுகவில் வென்ற, 20 எம்பிக்களுக்கும் வாய்ப்புகிடைக்கவில்லை.

அதிமுக வேட்பாளர்களில், வாரிசுகள் என பார்த்தால், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், முன்னாள் சபாநாயகர், பி.எச்.பாண்டியனின் மகன், மனோஜ் பாண்டியன், ராஜன் செல்லப்பாவின் மகன், ராஜ்சத்யன், அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்த்தனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

அதில், ஜெயவர்தன் மட்டும், ஜெயலலிதா இருந்த போதே ஜெயித்து எம்.பி.,யாக உள்ளார். வாரிசுகள் களமிறங்கியுள்ள தொகுதிகளில், அவர்களுக்கு பதில், வேறு நபர்களை நிறுத்தினால், தினகரனால், அதிமுகவிற்கு பாதிப்பு வரும் என உளவுத் துறை உஷார்படுத்தியது. அதன் பின்னரே வாரிசுகளை களமிறங்கியுள்ளது.

அதேபோல திமுகவிலும், 20 வேட்பாளர்களில், தயாநிதிமாறன், ஆ.ராஜா, டிஆர்பாலு, ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம் என முன்னாள் மத்திய அமைச்சர்கள் இருந்தாலும் 13 பேர்புதியவர்கள், ஆனாலும், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்க பாண்டியன், கவுதம சிகாமணி, கனிமொழி, கதிர் ஆனந்த் என வாரிசு  வேட்பாளர் பட்டியலில் நிறைந்துள்ளனர். எங்களை பொருத்தவரை, வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு, தகுதி, கட்சிக்கு ஆற்றியிருக்கிற பணியை பார்த்து தான், வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதிகம் பேர், புதிய முகங்கள் என கூறினார்.

இதேபோல், அதிமுக - திமுக கட்சிகள் அறிவித்த, 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் லிஸ்டில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் புது முகம் தான். ஜெயலலிதா கருணாநிதி இல்லாமல் நடக்கும் முதல் பெரிய தேர்தல் என்பதால், ரிசல்ட் வந்தால் தான் யார் கெத்தான தலைவர் என்பது தமிழக மக்களுக்கு தெரியவரும்.