தி.மு.க.வில் ’வாரிசுக்கு சீட்’ சர்ச்சையில் சிக்கிய முக்கியமானவர்களில் முதலில் நிற்பவர் தயாநிதி மாறன். மத்திய சென்னையில் இவருக்கு சீட் கொடுத்ததில் அக்கட்சியினர் கணிசமானவர்களுக்கு சந்தோஷமில்லை. காரணங்கள் பல. அதில் முக்கியமானது: கட்சிப்பணிகளில் தீவிரமாக உழைக்காமல் பைபாஸில் சீட் பிடித்தவர்! கட்சியினருடன் நெருங்கிப் பழகமாட்டார், முதலாளித்தனம் காட்டி விலகியே நிற்பார்! என்னதான் வேலை பார்த்தாலும் கட்சிக்காரர்களுக்கு பெரிதாய் பணம் தரமாட்டார்!...என்பனதான். ஆனாலும் தயாநிதி மாறன் ஃபர்ஸ்ட் கியரைப் போட்டு பிரசாரத்தை துவக்கிவிட்டார். ரத்த சொந்தம் என்பதால் ஸ்டாலினும் இவருக்கு ஃபுல் சப்போர்ட்டில் இருக்கிறார். இந்நிலையில் தயாவின் பிளஸ் மைனஸ்களை தொகுதியில் புகுந்து அலசியதில் கிடைத்த தகவல்கள்... * இதற்கு முன் இரண்டு முறை வென்று, கடந்த முறை அ.தி.மு.க.விடம் தோற்றவர் தயாநிதி. எனவே தயாவுக்கு இந்த தொகுதி பரீச்சயம்தான். * தயாநிதி மாறன், பா.ம.க. மற்றும் அ.ம.மு.க. இரண்டு கட்சிகளின் டார்கெட்டாக இருக்கிறார். இவருக்கான ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுகிறதா என்று கண்காணிக்க இவ்விரண்டு கட்சிகளுமே பறக்கும் படை அமைத்து கண்காணித்து வருகின்றனர். * இந்த தொகுதியில் சிறுபான்மையினரின் வாக்குகள் மட்டும் மூன்று லட்சம் இருக்கின்றது. இவர்களை கவர்வதற்காகவே அ.தி.மு.க. கூட்டணியின் பா.ம.க., அ.ம.மு.க. மற்றும் ம.நீ.ம. ஆகிய மூன்றுமே சிறுபான்மை பிரிவை சேர்ந்த நபர்களை வேட்பாளர்களாக்கியுள்ளனர். இந்த மூன்று அம்புகளுமே ஒரே இலக்கைத்தான் குறி வைக்கின்றன. எனவே மைனாரிட்டி வாக்கு வங்கியானது அப்படியே தயாவுக்கு கிடைக்காது. தாறுமாறாக சிதறும். * ஆனால் இந்த நாடாளுமன்ற தொகுதியிலடங்கும் ஆறு சட்டமன்ற தொகுதிகளும் தி.மு.க.வின் வசமுள்ளது. இந்த எம்.எல்.ஏ.க்களை நம்பித்தான் தயா இருக்கிறார். இவர்களின் கையில்தான் உள்ளது இவரது வெற்றி! * ’இந்தியா முழுக்க ஒரு ரூபாயில் போன் பேசும் திட்டத்தை கொண்டு வந்தேன். மக்களுக்கு வரமாக வந்த இந்த திட்டமே என் வெற்றிக்கு முக்கிய அடித்தளமாகும்.’ என்று தயா பெரிதாய் நம்புகிறார். * ஆனால் எதிர்த்து நிற்கும் மூன்று வேட்பாளர்களும் முழு பலம் காட்டி மைனாரிட்டி வாக்குவங்கியை பிரிப்பதால் தயாநிதியின் நிலை இப்போதைக்கு தொங்கலில்தான்! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். என்ன பண்ணப்போறீங்க தயா?