தப்பு தப்பா மொழிபெயர்க்க மைக், ஸ்பீக்கர் தான் காரணம்! வேற லெவல் விளக்கம் கொடுத்த தங்கபாலு...
ராகுல் காந்தியின் பேச்சை தப்பு தப்பாக மொழிபெயர்த்த தங்கபாலு பற்றி மீம்ஸ் இணையத்தில் ரவுண்டடிக்க அதற்கு புது விளக்கம் கொடுத்துள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் கடந்த வாரம் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது ராகுல் பேசியதை, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு தமிழில் மொழி பெயர்ப்பு செய்தார்.
ராகுல் பேசியபோது, காஷ்மீர் மக்களுக்கான காப்பீட்டு திட்டம் முழுவதும் அனில் அம்பானியிடம் மோடி ஒப்படைத்து விட்டதாக ஆங்கிலத்தில் கூறினார். இதனை தமிழில் மொழிபெயர்த்த தங்கபாலு, நம்முடைய இந்திய நாட்டுடைய முக்கியமான பகுதியாக இருக்கும் ஜம்மு காஷ்மீர் அனில் அம்பானி கையிலே ஒப்படைக்கப்பட்டு விட்டது என்று பேசினார்.
"நாங்கள் தமிழ்நாட்டு மக்களை நேசிக்கிறோம்" என்று ராகுல் கூறியதற்கு, "நாம் அதற்காக தான் போராடிக் கொண்டு இருக்கிறோம், நம்முடைய வலிமை, வளமான இடத்தில் காட்டுவோம்" என்று தங்க பாலு மொழிபெயர்த்தார். அதே போல் "அதனால் தான் தமிழ் மக்கள் மீது நாங்கள் மரியாதை வைத்து இருக்கிறோம்" என்று ராகுல் கூறியதற்கு, "நரேந்திர மோடி தமிழ் மக்களுடைய எதிரி" என்று தங்க பாலு மொழிபெயர்த்தார்.
அனில் அம்பானி விமானத்தை வாழ்நாளில் ஒருபோதும் தயாரித்தது இல்லை என்று ராகுல் பேசியதை, அனில் அம்பானி எப்போது உண்மையை பேசுபவர் அல்ல என்று ராகுல் காந்தியின் பேச்சை தங்கபாலு தப்பு தப்பாக மொழி பெயர்த்தார். தங்கபாலுவின் இந்த மொழிபெயர்ப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செம்ம மீல்ஸாக இருந்தது. தங்கபாலுவை கலாய்த்து மீம்ஸ்களும், வீடியோக்களும் வைரலானது.
இந் நிலையில் இதுதொடர்பாக தங்கபாலு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், என்ன நடந்துச்சுனு தெரியாம ஆளாளுக்கு மீம்ஸ் போடுறாங்க. அது தவறு. அன்று ராகுல் பேசுன மேடையில், அவருக்கு அருகில் இரண்டு லவ்டு ஸ்பீக்கர் இருந்துச்சு. அதனால சவுண்டு அதிகமா இருந்துச்சு. மேலும், தொண்டர்கள் ஆரவாரம், அதையும் தாண்டி அந்த ஏரியாவுல எதிர் பக்க காற்று வீசியதால் இரைச்சல் அளவுக்கு அதிகம் இருந்தது. அதனால் தான் எனக்கு மொழிபெயர்க்க சிரமம் அதிகமாக இருந்தது. இப்படி பல இன்னல்கள் இருந்தும் 99 சதவீதம் சரியாகத்தான் மொழிபெயர்த்தேன் என கூறியுள்ளார்.