பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் அதிமுகவுக்கு தேர்தலில் எந்த பாதிப்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறினார்.

சேலம் 5 ரோடு அருகே, அதிமுக தேர்தல் அலுவலகத்தை நேற்று  பொன்னையன் திறந்து வைத்தார். இதையடுத்து, நடந்த  கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''வரும் மக்களவை தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாற்பது தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திருப்பரங்குன்றம் வேட்பாளர் போஸ் வெற்றி பெற்றது செல்லாது என உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. என்றாலும், அந்த வழக்கு இன்னும் முடிவு பெறவில்லை. நிலுவையில்தான் இருக்கிறது. அதனால் இப்போது அதைப்பற்றி எதுவும் சொல்ல முடியாது. 

பொள்ளாச்சி விவகாரத்திற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த விவகாரத்தால் அதிமுகவின் வெற்றி பெறுவதில் பின்னடைவு ஏதும் இல்லை,  ஸ்டாலின், எங்கள் மீது பொய்யான புகார்களை கூறி வருகிறார். 

ஆனால், மக்கள் இதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். முதல்வர் பிரச்சாரத்தில் மக்களிடம் வரவேற்ப்பே இல்லை என்பது போல எதிர்க்கட்சியினரும், சில ஊடகங்கள் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர், ஆனால்,முதல்வர் செல்லும் அனைத்து பகுதிகளிலும் பிரம்மாண்ட வரவேற்பு உள்ளது என்றார்.