அதிமுக பிஜேபி கூட்டணிக்கு அடிபோட்டுக்கொண்டிருக்கும் அதே வேளையில், திமுகவில் தூது விட்டு முக்குடைபட்டதால் காண்டான  பிரேமலதா, சுதீஷ் கொந்தளித்து தள்ளியதால் வெளுத்து வாங்கியிருக்கிறது முரசொலி.

அதில் திமுக பொருளாளர் துரைமுருகன் அப்படி என்ன சொல்லிவிட்டார்... தம்பி சுதீஷ் முதல் நாள் குதிக்கிறார். அக்காள் பிரேமலதா மறுநாள் ஒரு ருத்ர தாண்டவமே ஆடிவிட்டார்... என பலருக்கும் என்னிடத் தோன்றும்! மணப்பெண் இருந்தால் 10 பேர் கேட்கத் தான் செய்வர். தேர்தலும் அதுபோலத்தான் என பிரேமலதாவே கூறியுள்ளார்! நல்ல உதாரணம்! ஆனா அந்த பெண்ணை வைத்துக் கொண்டு 10 பேரிடம் பேரம் பேசுவது எந்த வகையைச் சேர்ந்தது என்பதைக் கூட எண்ணிப் பாராது, பிரேமலதா பேசியுள்ளது எல்லாரையும் நெளிய வைக்கக் கூடியது அல்லவா?

எது வேண்டுமானாலும் கேளுங்கள்... எல்லாருக்கும் பதில் சொல்கிறேன்! எனத் தன் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்த உடன் ஏக வசனத்தில் பேசுவதும், பாய்ந்து வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாது வெளிறிய முகத்தை செயற்கையான சிரிப்பின் மூலம் மறைக்க முயற்சித்ததையும் தொலைக்காட்சிகளின் நேரலையில் அந்தப் பேட்டி காட்சிகளைக் கண்டவர்கள் ரசித்துக் கொண்டிருந்தார்களே! ஒரு பக்கம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் தேமுதிகவினர் மற்றொரு பக்கம் துரைமுருகனையும் சந்தித்து கூட்டணி குறித்து பேச வந்தனர்!

இன்று பூஜ்யம் ஆகிவிட்டாலும் ஒரு நேரத்தில் ராஜ்யத்தின் எதிர்க்கட்சியாக இருந்த கட்சிக்காரர்களாயிற்றே எனும் மரியாதையைத் தந்து துரைமுருகனும் அக்கட்சியின் தூதுவர்களை சந்தித்தார்!. அரசியல் களம் சூடு பிடித்து இருக்கும் நிலையில், சுடச் சுட செய்தி சேகரித்திடும் செய்தியாளர்களும் இந்தச் சந்திப்பை அறிந்து சந்திப்பு நடந்த துரைமுருகன் இல்லத்தில் கூடிவிட்டனர்!

தன்னைச் சந்திக்க வந்த தேமுதிக முன்னணியினரிடம் "காலம் தாழ்ந்து வந்திருக்கிறீர்கள்... அங்கே..பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது இங்கே ஏன் பேச்சுவார்த்தை நடத்த வந்திருக்கிறீர்கள்... நாங்கள் கூட்டணியோடு பேசி தொகுதிகள் எல்லாம் பங்கு பிரித்துக் கொண்டு விட்டோம். இனி முடிவு செய்யக் கூடிய நிலை தலைவரிடம் உள்ளது... அவர் ஊரில் இல்லை. வந்தவுடன் உங்கள் எண்ணத்தைத் தெரிவிக்கிறேன்... எனத் தான் துரைமுருகன் கூறியுள்ளார். அதனைத்தான் செய்தியாளர்களிடமும் கூறியுள்ளார்!

இதில் என்ன தவறு இருக்கிறது? என்ன அரசியல் நாகரிகமற்றத் தன்மை இருக்கிறது? "துரைமுருகன் செய்தியாளர்களிடம், கூட்டணியில் சேர இவ்வளவு பேரம் பேசினார்கள்... எங்களால் தர முடியாது என்று சொன்னாரா? அல்லது அவர்கள் இவ்வளவு தருகிறேன் என்கிறார்கள். நீங்கள் எவ்வளவு தருகிறீர்கள் என்று கேட்டார்கள் என கூறினாரா? அவர் கூறியதெல்லாம் அங்கும் பேசுகிறீர்கள் இங்கும் பேசுகிறீர்கள்... உங்கள் தலைமைக்குத் தெரியுமா என்று கேட்டேன் என்றுதானே கூறினார்!

இதிலே தம்பி சுதீஷ், அக்காள் பிரேமலதா கொதிப்படைய என்ன இருக்கிறது? முதல் நாள் சுதீஷ் பேட்டி... மறுநாள் அக்காள் பிரேமலதா பேட்டி என உப்புக்கண்டத்தைப் பறிகொடுத்த முரட்டு சைவப் பெண் போல பதறிடக் காரணமென்ன? சுதீஷும், பொருளாளர் துரைமுருகனைச் சந்தித்த தேமுதிகனவினரும் திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் முதல் நாள் ஒரு பேட்டியைக் கொடுத்துவிட்டனர்! "பொருளாளர் துரைமுருகனை சொந்தக் காரியத்துக்காக சந்தித்தோம், தேர்தல் உடன்பாடு குறித்து பேசவில்லை என்று தெரிவித்துவிட்டார்கள். அவர்கள் பேட்டியைத் தொடர்ந்து துரைமுருகனும் நடந்ததை விளக்கினார்! அத்தோடு விட்டுவிட்டு பிஜேபி மற்றும் அதிமுகவோடு நடத்திக் கொண்டிருக்கும் வியாபாரத்தை தொடராமல் ஏன் பிரேமலதா பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த வேண்டும் என்று சிலர் கருதலாம். அது நியாயம்தான் நீங்கள் நாங்கள் கேட்பதைத் தராவிட்டால் திமுக அணியோடு போய்விடுவோம் என மிரட்டி பாஜக, அதிமுகவோடு நடத்திக் கொண்டிருந்த பேரம் படியுமுன் " துரைமுருகன் எங்களிடம் இடமில்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அதனையும் செய்தியாளர்களிடம் போட்டு உடைத்து விட்ட நிலையில் ஆத்திரம் வரத்தானே செய்யும்!

இனி பாஜக , அதிமுக கொடுத்ததைத்தானே ஏற்க வேண்டும். இந்த அரசியல் பேரத்தில் எவ்வளவு கிடைக்கும் என்றெல்லாம் நினைத்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தோமே... எல்லாவற்றையும் திமுக பாழடித்துவிட்டதே என நினைக்கும் போது ஆத்திரம் வெடிக்கத்தானே செய்யும்! அந்த வெடிப்பின் எதிரொலிதான் பிரேமலதாவின் செய்தியாளர்கள் சந்திப்பு! அதன் விளைவுதான் திமுக மீது பாய்கிறார்... அதிமுக மீது கோபத்தை கொப்பளித்து துப்புகிறார்! பிஜேபியைச் சாடுகிறார்! செய்தியாளர்கள் மீது சீறிப் பாய்ந்து பிராண்டுகிறார்!

பேர அரசியல் நடத்தி ஒரே நாளில் குபேர புரியை எட்டிவிடலாம் எனக் கனவு கண்டு கொண்டிருந்தவர்கள் எண்ணத்தில் துரைமுருகன் மண் விழச் செய்துவிட்டாரே என்ற கொதிப்பு பிரேமலதா பேட்டியில் தெரிந்தது! பின் விளைவுகளை சிந்திக்காது சில கூலிகளை வீட்டு முன் கூச்சல் போட அனுப்பி தேன் கூட்டில் கல்லெறியும் பைத்தியக்காரச் செயலில் ஈடுபடுவது அவர்களின் அரசியல் முதிர்ச்சியற்றத் தன்மையைக் காட்டுகிறது! பிரேமலதா கம்பெனியின் இந்தச் செயல்களை எல்லாம் பார்க்கும் போது நமக்கு ஒரு சினிமா பாடல்தான் நினைவுக்கு வருகிறது. " நினைத்தது ஒண்ணு... நடந்தது ஒண்ணு... அதனாலே முழிக்குதே அம்மா பொண்ணு!