பேரமா பேசுறீங்க? தேமுதிகவை தெளிய தெளிய வெச்சு செஞ்ச ஸ்டாலின்!! ஊரிலிருந்து வந்ததும் செய்த சம்பவம்
ஊர் அடங்கிய பிறகு யாருக்கோ சொந்தமான மர்ம மாளிகையில் திரைமறைவில் நடக்கவில்லை. நட்சத்திர ஓட்டலில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. பொதுக்கூட்ட மேடை ஏறுவதற்கு முன்பாக ஒப்பந்தம் போட்டு எப்படியாவது இழுத்து வந்து மேடையேற்ற வேண்டும் என்று திட்டமிடப்படவில்லை. கட் - அவுட்டை வைப்பதும் எடுப்பதுமாக கேலிக்கூத்துகள் இல்லை என பிஜேபி தேமுதிக கூட்டணி பேரம் பற்றி கிழித்து தொங்கவிட்டுள்ளார் முக ஸ்டாலின்.
நேற்று காலை துரை முருகனிடம் தொலைபேசியில் பேசிய விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், கூட்டணி வைக்க விரும்புவதாக கூறினார். இதனைத் தொடர்ந்து, தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் எனக் கூறி, மூன்று பேர், என் வீட்டிற்கு வந்தனர். 'அ.தி.மு.க., கூட்டணியில் இணைவதற்கு, எங்களுக்கு விருப்பம் இல்லை. தி.மு.க., அணியில் சேர விரும்புகிறோம்' என சொன்னதாகவும். 'நீங்கள் இங்கு வருவது, விஜயகாந்திற்கு தெரியுமா' என்று துரைமுருகன் கேட்டுள்ளார்.'நாங்கள், ஏற்கனவே, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்து விட்டோம். உங்கள் கவுரவத்திற்கு ஏற்ற தொகுதிகள் இல்லை. தலைவரும் வெளியூரில் இருக்கிறார். 'தொகுதி வழங்கும் அதிகாரம், தலைவருக்கு மட்டும் தான் உண்டு. அவர் வந்ததும், இந்த விஷயத்தில் முடிவெடுப்பார்' எனக் கூறி, அவர்களை அனுப்பியதாக கூறினார்.
மேலும் பின், ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தேன். தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக, போன் சொன்னது. பின், தொடர்பு கொண்டபோது, அவர் துாங்குவதாக கூறினர். 'ஏதும் முக்கிய விஷயமா' என்று கேட்டனர்; ஒன்றுமில்லை எனக் கூறி, இணைப்பை துண்டித்து விட்டேன்.இப்போது பார்த்தால், 'நாங்கள், அ.தி.மு.க.,விடம் பேசி வருகிறோம்' என, சுதீஷ் பேட்டி அளிக்கிறார். இவர்களை நம்பி, எப்படி முடிவெடுப்பது; முதலில், அவர்கள், ஒரு முடிவுக்கு வரட்டும்.இவ்வாறு, துரைமுருகன் கூறினார்.
இந்நிலையில் இன்று காலை ஊரிலிருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின், தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என தொடங்கும் இந்த மடலில் கலைஞர் அவர்கள் நம்மிடையே இல்லாமல் நாம் சந்திக்கின்ற முதல் தேர்தல் களம் இது. இவ்வளவு பெரிய சுமையைத் தாங்குவது அவ்வளவு எளிதானதா என எண்ணிப் பார்த்தபோது, தலைவர் கலைஞர் அவர்கள் அனுதினமும் அன்புடனும் அக்கறையுடனும் ஊட்டிய ஆழமான கொள்கை உணர்வுடன் நாங்கள் என்றும் உறுதியுடன் இருக்கிறோம் என கோடிக்கணக்கான அவரது உடன்பிறப்புகளான நீங்கள் தரும் உற்சாகத்தாலும் தெம்பாலும், உங்கள் இதயம் பெருக காட்டுகின்ற பாசத்தாலும் உங்களில் ஒருவனான எனக்கு இந்த சுமையும் கூட சுகமாகி விடுகிறது. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் - என்பதைப் போல, ஒருகோடி உடன்பிறப்புகள் உடையான் எந்த சவாலையும் எதிர்கொள்வான், வெல்வான் என்பது கழகம் சொல்லும் உண்மையன்றோ! தலைவர் கலைஞர் அவர்கள் உயிருடன் இருந்தால், இன்று நாடு இருக்கும் நிலையில் என்ன முறையில் மக்களவைத் தேர்தல் களத்தைச் சந்திப்பாரோ அதே வழியில் மதச்சார்பற்ற - மக்கள் நலன் காக்கும் மாபெரும் முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி, பிரதமர் வேட்பாளர் யார் என்பதைத் தெளிவாக முன்மொழிந்து தேர்தல் களத்தைச் சந்திக்க கழகம் ஆயத்தமாகிவிட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியின் நோக்கம், பாசிச ஆட்சியின் பிடியிலிருந்து இந்தியாவையும், அந்தப் பாசிசத்தின் காலில் விழுந்து காலபூஜை செய்து கிடக்கும் அடிமைகளிடமிருந்து தமிழ்நாட்டையும் மீட்டுருவாக்கம் செய்வதுதான். அதற்காக ஒரே நோக்கம், ஒரே சிந்தனை – சொல் - செயல் என ஒன்றுபட்டு இணைந்து அமைந்திருக்கும் நமது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டு, அவர்களுடன் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, அந்தந்த கட்சிகளுக்கும் உரிய தொகுதிகளுக்கான பங்கீடு முழுமையாக நடந்து நிறைவேறியிருக்கிறது. தலைவர் கலைஞர் அவர்கள் எப்படி கழகத்தின் சார்பில் குழுக்கள் அமைத்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை உறுதி செய்திடுவாரோ அதே நடைமுறைப்படி தொகுதிப் பங்கீடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
தொகுதி உடன்பாடு தொடர்பான எந்தப் பேச்சுவார்த்தையும் ஊர் அடங்கிய பிறகு யாருக்கோ சொந்தமான மர்ம மாளிகையில் திரைமறைவில் நடக்கவில்லை. நட்சத்திர ஓட்டலில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. பொதுக்கூட்ட மேடை ஏறுவதற்கு முன்பாக ஒப்பந்தம் போட்டு எப்படியாவது இழுத்து வந்து மேடையேற்ற வேண்டும் என்று திட்டமிடப்படவில்லை. கட் - அவுட்டை வைப்பதும் எடுப்பதுமாக கேலிக்கூத்துகள் இல்லை. ஏனெனில், கழகக் கூட்டணி என்பது ஊழல் ஆதராங்களைத் திரட்டி வைத்துக் கொண்டு - ரெய்டு பயம் காட்டி - மிரட்டி அமைக்கப்பட்ட செயற்கைக் கூட்டணி அல்ல. மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள மக்கள் விரோத – ஜனநாயக விரோத ஆட்சியாளர்களை விரட்டி அடிக்கின்ற கூட்டணி.
அதனால்தான் நிதானமாகப் பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்தன. உரிய வகையில் உவப்பான சூழலில் உடன்பாடுகள் ஏற்பட்டன. இந்திய தேசிய காங்கிரசுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 1 மக்களவை தொகுதி - 1 மாநிலங்களவைத் தொகுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி, அதுபோலவே போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதி என 20 தொகுதிகள் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள 20 தொகுதிகளில் தி.மு.கழகம் போட்டியிடுவதென ஒப்பந்தங்கள் நிறைவேறியுள்ளன. தொகுதிப் பங்கீட்டில் கழகத்தின் தலைமையிலான கூட்டணியே முந்தி நின்றது போல, களப்பணியிலும் அது தரப்போகிற வெற்றியிலும் நமது அணியே முந்தி நிற்கும் - முதன்மை பெறும் - முழுமையாக வெல்லும் என்பது திண்ணம்.
அதற்கு அச்சாரமாகத்தான், கூட்டணி ஒப்பந்தங்கள் நிறைவடைந்த மறுநாள் மார்ச் 6-ஆம் நாள் விருதுநகர் மண்ணில் கழகத்தின் சார்பில் நடந்த தமிழகத்தின் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பேரணியில் திரண்டிருந்தது மகத்தான மக்கள் வெள்ளம். கடல் காணா விருதுநகரில் மனிதத் தலைகளே கடல் அலைகளாக அற்புதக் காட்சி அளித்து அழிக்க முடியாத சாட்சிகளாக நின்றன. பெருந்திரளான உடன்பிறப்புகள், தோழமைக் கட்சிகளின் தொண்டர்கள், பொதுமக்கள் எனத் திரண்டிருந்த கூட்டம், 40 தொகுதிகளின் வெற்றிச் செய்தியை விளம்பிடும் வகையில் இருந்தது.
அதே நாளில் பிரதமர் மோடி பங்கேற்ற கட்டாயக் கூட்டணியின் - பொருந்தாக் கூட்டணியின் பொதுக்கூட்டம் சென்னை அருகே நடைபெற்றது. பிரதமர், முதல்வர், துணை முதல்வர், மக்களவை துணை சபாநாயகர் எனப் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருப்பவர்களே, பொறுப்பை மறந்து மனசாட்சியைத் துறந்து பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டதை நாடு பார்த்தது; நகைத்தது. சில நாட்கள் முன்பாகத்தானே ஒருவர், தமிழ்நாட்டை பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று நாடாளுமன்றத்திலேயே பேசினார். இன்னொருவர், மத்திய அரசு நிதி வழங்காததால் மாநில அரசு கடன் சுமையில் தத்தளிக்கிறது என சட்டப்பேரவையில் தெரிவித்தார். இன்னொருவர் தலைமையிலான அரசின் தொழில் குறிப்புதானே, ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சிறு - குறு தொழில்கள் முடங்கி விட்டன எனப் பேரவையிலேயே தெரிவித்தது.
இத்தனையையும் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் மறக்காத நிலையில், இவர்கள் எல்லாவற்றையும் மறந்தும் - மறைத்தும் அண்டப்புளுகு - ஆகாசப்புளுகு என அள்ளி விடுகிறார்களே என நாடு சிரித்தது. நீட் தேர்வினால் உயிர் பறிக்கப்பட்ட அனிதா முதல் கஜா புயலால் வாழ்விழந்த டெல்டா மாவட்ட மக்கள் வரை ஒருவரையும் மதிக்காத மத்திய பா.ஜ.க. அரசுக்கு மாநிலத்தை ஆளும் அடிமைகளும் அவர்களின் திடீர் கூட்டாளிகளும் கவரி வீசுகிறார்களே என மக்கள் எள்ளி நகையாடினார்கள். அதைத்தான் விருதுநகர் பேரணியில் எடுத்துரைத்தேன். ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழிப்பதற்கு இன்னும் ஆதாரங்கள் ஏராளமானவை இருக்கின்றன. அத்தனையும் தேர்தல் களத்தில் அணிவகுத்து வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.
ஜனநாயகம் காக்கின்ற பெரும்பணியில் இருக்கின்ற இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் எனும் சுயாட்சிமிக்க அமைப்பு, ஆட்சியாளர்களின் அதிகார மீறல்களுக்கு அடிபணியாது என்கிற நம்பிக்கை இன்னமும் மிச்சமிருக்கிறது. அந்த நம்பிக்கை காப்பாற்றப்பட வேண்டுமென்றால், மக்களவைத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட வேண்டும். 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் வழங்கவிருக்கும் ஜனநாயகத் தீர்ப்பு மத்தியில் ஆளப் போவது யார் என்பதை தீர்மானிப்பது மட்டுமல்ல, மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். திடமாக இருக்கிறார்கள். தங்களை வாட்டி வதைக்கின்ற மத்திய - மாநில ஆட்சியாளர்களை விரட்டி அடிக்கவேண்டும் என்பதில் வேகமாகவும் உறுதியாகவும் இருக்கிறார்கள். மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய கடமை, தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களின் கரங்களில் இருக்கிறது. 8 ஆண்டுகளாகக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இல்லை. நம் கையில் அதிகாரம் இல்லை. ஆனாலும், ஆட்சியாளர்கள் தங்கள் திறனைக் காட்டத் துப்பின்றி நம் மீது சகதி வாரி அடிக்கப் பார்க்கிறார்கள். ஏனென்றால், அவதூறுகளைப் பரப்பியாவது ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பதவி வெறிதான் அவர்களைப் பொய்யிலே ஊற வைத்த புளுகு மூட்டைகளாக்கியிருக்கிறது.
கொள்ளையடிப்பதற்காக ஆட்சி நடத்துவோரின் எண்ணத்தை முறியடித்திட, கழகம் மீண்டும் அரியணை ஏறிட, அதன் மூலமாக ஊராட்சிகள் தொடங்கி மாநகராட்சிகள் வரை அனைத்து நிலைகளிலும் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திட, தமிழ்நாடு செழித்திட கழகத்தினர் ஒவ்வொருவரும் உறுதியேற்றுப் பணியாற்றிட வேண்டும்.
20 தொகுதிகளில் தி.மு.கழகம் நிற்கிறது. மீதி 20 தொகுதிகளிலும் தி.மு.கழகம்தான் நிற்கிறது. அந்த சீரிய எண்ணம்தான், தலைவர் கலைஞர் நமக்கு ஊட்டியுள்ள தோழமை உணர்வு. 40 தொகுதிகளிலும் நமது கூட்டணியை எதிர்த்து நிற்பவர்கள் மக்கள் விரோத ஆட்சியாளர்கள் -அவர்களின் பங்குதாரர்கள். அந்த ஊழல் பெருச்சாளிகள் மீண்டும் நுழைவதற்கு ஒரு தொகுதியிலும் இடம் கொடுத்துவிடக் கூடாது. அதுபோலவே, சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் 21 தொகுதிகளிலும் நாம் பெறப் போகும் வெற்றி, ஒவ்வொரு வாழ்விலும் உதயசூரியனின் வெளிச்சக் கதிர்களைப் பாய்ச்சப் போகிற வெற்றி. கதிரொளி பாய்ந்தால் வளம் பெருகும். நாடு ஒளி மயமாகும்.
அந்த உயரிய எண்ணத்தோடு, ஓயாத உழைப்போடு உறுதியான உள்ளத்தோடு பணியாற்றிடுவோம். களம் அழைக்கிறது; காலம் நமக்கானது. தலைவர் கலைஞர் காட்டிய வழியில் ஈட்டிடுவோம் வெற்றியை! நாற்பதும் நமதாகட்டும்! நாடு நலம் பெறட்டும் என இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்.