சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளனர்.

தேமுதிகவின் அரசியல் வரலாற்றிலேயே மிகவும் மோசமான நாள் இதுவாகத்தான் இருக்க முடியும். காலையில் பியூஷ் கோயலுடன் பேசிய தேமுதிக சுதீஷ், அப்படியே திமுகவின் துரைமுருகனுடனும் பேசியுள்ளார். அதை துரைமுருகனே கலாய்த்து தொங்க விட்டார். மொத்தத்தில் தமிழக மக்கள் மத்தியி்ல அசிங்கப்பட்டு நிற்கிறது தேமுதிக.

எப்போது பாமக அதிமுகவுடன் இணைந்து விட்டதோ அப்போதே 'மெகா கூட்டணி' என்ற பேச்சு அடிபட ஆரம்பித்துவிட்டது. இது தேமுதிக தரப்புக்கு கூடுதல் கடுப்பை தந்துவிட்டது.  பாமகவுக்கு 7 +1 என்று ஒதுக்கி தேமுதிகவை அதிர வைத்தது. இதை தேமுதிக எதிர் பார்க்காததால் அதிமுகவுடன் பேரம் நடத்தி படியாததால் மீண்டும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த துரைமுருகன் வீட்டிற்க்கே சென்று எங்களை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என கேட்டு விட்டு வந்திருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து, “மத்திய மந்திரி பியூஷ் கோயல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை சந்திக்குமாறு பேசினார். அதன் அடிப்படையில் இன்று அவரை சந்தித்து பேசினேன்.  பாஜகவுடன் கூட்டணி என்கிற முடிவை தலைவர் எடுத்தார். அதன்படி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என சுதீஷ் கூறினார்.

தற்போது சென்னையில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பியூஸ் கோயல் செல்வதால் மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும். தேமுதிகவின் பலத்தின் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எங்கள் கட்சியின் பலம் எங்களுக்குத்தான் தெரியும், எங்கள் தேவையை தெரிவித்துள்ளோம். நாளை அல்லது நாளை மறுநாள் கூட்டணி இறுதியாகலாம்.  தமிழகத்தில் அடுத்த முறை  மோடி பங்கேற்கும் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பார்” என சுதீஷ் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் தமிழிசை ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.