நேற்று, புதிய தமிழகம் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், துணைச் செயலாளர் குற்றாலம், இளைஞரணி துணைச் செயலாளர் மங்கள் ராஜ் மற்றும் நெல்லை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் பல்வேறு ஒன்றியங்களில் இருந்தும் முன்னாள் நிர்வாகிகள்  உட்பட 100 க்கும் மேற்பட்டோர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று அக்கட்சியில் சேர்ந்தனர். இணைந்தனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் நிர்வாகிகளும்  கொத்தாக கூண்டோடு காலி செய்துவிட்டு திமுகவிற்கு வர இருக்கிறார்கள் என திமுகவில் சேர்ந்தவர்கள் கூறினார்கள். இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் சார்பில் நேற்று செய்திக் குறிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இது குறித்து ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அக்கடிதத்தில், “புதிய தமிழகம் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தங்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்ததாக வந்த செய்தியைக் கண்டு அதிர்ச்சியுற்றோம். உங்கள் தலைமையில் இணைந்தது போன்று காட்டப்பட்டவர்கள் எவரும் புதிய தமிழகம் கட்சிக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாதவர்கள்.

அவர்களில் ஒருவர் மட்டும் 2 வருடங்களுக்கு முன்பே கட்சி விரோத நடவடிக்கைக்காக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர். அதைக்கூட சரிபார்க்காமல், அவர்களுக்கு "புதிய தமிழகம் கட்சி" அடையாளம் கொடுத்தது எந்தவிதத்திலும் நியாயமில்லை. இது எங்கள் கட்சிக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இதற்கு உரிய வகையில் மறுப்பு தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார் கிருஷ்ணசாமி.