நடிகர் கமலின் மக்கள் நீதி மையம் கட்சியை அக்குவேறு ஆணிவேராக பிரித்து எடுக்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது.

மக்கள் நீதி மையம் கட்சியின் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பொறுப்பாளராக இருந்தவர் குமரவேலு. இவர் நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக இருந்தாலும் எப்போதும் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் இவரை பார்க்க முடியும். வேட்பாளர் நேர்காணல் விருப்ப மனுக்கள் பரிசீலனை என மக்கள் நீதி மையம் வேட்பாளர் தேர்வில் குமரவேல் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் திடீரென குமரவேல் தான் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு வேட்பாளர் தேர்வில் கமலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு தான் காரணம் என்று தகவல்கள் சொல்லப்பட்டன. கடலூர் தொகுதியில் போட்டியிட குமரவேல் விரும்பியதாகவும் ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பை கொடுக்க கமல் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தான் குமரவேல் கட்சியில் இருந்து விலகுவதாகவும் சொல்லப்பட்டது.

இதுகுறித்து கமல் வெளியிட்ட அறிக்கைகள் கூட நேர்காணலில் கூட கலந்து கொள்ளாத குமரவேலுவை எப்படி வேட்பாளராக அறிவிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் மக்கள் நீதி மையத்தின் உயர்மட்ட நிர்வாகிகளில் ஒருவராக இருந்ததால் நேர்காணலில் கலந்து கொண்டால் தான் போட்டியிட வாய்ப்பு வழங்குவார்கள் என்று குமரவேல் பதில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் குமரவேலை வைத்து மக்கள் நீதி மையம் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த மிக முக்கியமான கட்சி ஒன்று பக்காவான திட்டத்தைத் தீட்டி உள்ளதாகக் கூறுகிறார்கள். அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக தான் குமரவேல் கட்சித் தலைமை மீது புகார் கூறி விலகி உள்ளதாகவும் சொல்கிறார்கள். தொடர்ந்து மக்கள் நீதி மையம் கட்சிகள் நடைபெற்று வரும் குழப்பங்கள் மற்றும் முரண்பாடுகள் குறித்து குமரவேலை வைத்து பொதுவெளியில் பேச வைப்பதற்கான ஏற்பாடுகளை அந்த முக்கியமான கட்சி செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் நீதி மையம் கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்கள் மற்றும் செயல்பாட்டில் இல்லாதவர்களையும் அந்த கட்சியில் இருந்து பிரித்து கமலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க அந்த முக்கிய கட்சி திட்டமிட்டு உள்ளதாகக் கூறுகிறார்கள். 

கமல் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்படுவதற்குள் மக்கள் நீதி மையம் கட்சியை அக்குவேறு ஆணிவேராக பிரித்து போட வேண்டும் என்று ஒரு அசைன்மென்ட் கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அந்த குறிப்பிட்ட கட்சியை கமல் மிக மோசமாக அண்மைக்காலங்களில் விமர்சித்தது தான் என்கிறார்கள். டிவிக்களில் பேட்டி அளிப்பதும் மேடைகளில் விமர்சித்துப் பேசுவது மட்டுமே அரசியல் கிடையாது, தேர்தல் அரசியல் என்பது மிகவும் மோசமானதாக இருக்கும் என்று கமலுக்கு எடுத்துக் காட்டவே இந்த ஏற்பாடு என்கிறார்கள்.