ஜெயலலிதாவையே சந்தித்தவன் நான் எனவே துணை முதல்வரான ஓபிஎஸ்சை கண்டு நான் பயப்பட போவதில்லை அவர்களை அவர்களுடைய இடத்திலேயே வைத்து தோற்கடிப்பேன் என காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சபதம் போட்டுள்ளார்.

தேனி  தொகுதிக்கு அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் போட்டிபோட இருக்கிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனிடம்  செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் உங்களை எதிர்த்து போட்டி போட இருக்கிறார்களே? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், என்னை எதிர்த்து போட்டி போடுபவர்களை நான் போட்டியாகவே கருதுவதில்லை. என்னைப் பொறுத்த வரையில் நான் சுடுகாட்டில் தியானம் செய்து அரசியல் செய்பவனல்ல, மக்களின் குறைகளை அறிந்து அதை தீர்ப்பதற்காக பாடுபடுகின்ற ஒரு அரசியல்வாதியாக இருக்கிறேன். 

எனது 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரனாக இருக்கிறேன். என்னை தேனியில் போட்டியிட வேண்டும் என்று  ராகுல்காந்தி சொன்னதால் போட்டியிடுகிறேன். நான் கண்டிப்பாக போட்டி போடுவதுடன் மட்டுமல்லாமல் மிகப்பெரிய வெற்றியை நான் பெருவேன்.  

தேனி தொகுதியில் பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வருகிறது. அது ஏற்கனவே அதிமுக வெற்றி பெற்ற தொகுதி. இது ஒருபக்கம் இருக்க ஓபிஎஸ் தகுதியான போடி தொகுதியும் உள்ளது. அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி களத்தில் எதிர் கொள்ள போகிறீர்கள்? எனக் கேட்டதற்கு பதிலளித்த அவர், என்னை பொருத்த வரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே சந்தித்தவன் நான் எனவே துணை முதல்வரான ஓபிஎஸ்சை கண்டு நான் பயப்பட போவதில்லை அவர்களை அவர்களுடைய இடத்திலேயே வைத்து தோற்கடிப்பேன் எனக் கூறியுள்ளார்.