அதிமுக.- தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதால், அடையாறு கிரவுன் பிளாசா ஹோட்டலில் அதிகாரப்பூர்வமாக  கையெழுத்தானது.

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதி பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டடோர் தேமுதிக தொகுதி பங்கீடு குழு தலைவர் சுதிஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் உடன்பாடு எட்டப்படவில்லை.

மத்திய அமைச்சர் பியூஷ்கோயலும் தேமுதிக உடனான கூட்டணியை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால்  தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்நிலையில் அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர், தொலைபேசி மூலம் சுதிஷ் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் தேமுதிகவுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று இரவு 7.30 முதல் 8.30 மணியளவில் அடையாறு கிரவுன் பிளாசா ஹோட்டலில் தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், 4 தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் கூட்டணி ஒப்பந்தத்தில் பங்கேற்பதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு வருகை தந்தனர். அவர்களை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டு தேமுதிக - அதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. கூட்டணி ஒப்பந்தத்தில் அதிமுக சார்பில் ஓபிஎஸ்-ஈபிஎஸ், தேமுதிக சார்பில் விஜயகாந்த் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் போது, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உடன் இருந்தனர்.

ஏற்கனவே பாமகவிற்கு 7 தொகுதிகளும், பிஜேபிக்கு 5, தொகுதிகளும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கு ஒரு தொகுதியும்,  ஏசி சண்முகத்துக்கு 1 தொகுதியும், புதுவை ஏன்.ஆர் காங்கிரஸ்க்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்ட நிலையில், தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளது. இது போக, ஜிகே.வாசனின் தமாகவிற்கு 1 தொகுதி கொடுக்கவுள்ளதாக தெரிகிறது.