அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் நேற்று வெளியிட்டார். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு தருமபுரி மாவட்ட அமமுக செயலாளரான டி.கே.ராஜேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்த டி.கே.ராஜேந்திரன் யார் என்று தெரியுமா?

ஜெயலலிதாவின் முதல் ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானில் உள்ள பிளஸன்ட் ஸ்டே என்ற ஹோட்டலுக்கு விதிமுறைகளை மீறி 7 தளங்களை கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. 1996ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா மீது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர்.

இந்த வழக்கில் 2000-வது ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒராண்டு சிறை தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பு வெளியானதும் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் இறங்கினர். 50 பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. 5 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அந்தத் தருணத்தில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் கல்விச் சுற்றுலா சென்றுவிட்டு இரண்டு பேருந்துகளில் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களை தர்மபுரி மாவட்டத்தில் தடுத்தி நிறுத்திய வன்முறைக் கும்பல், மாணவிகள் முழுமையாக பேருந்தை விட்டு இறங்குவதற்கு முன்பாக பேருந்தில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து கொளுத்தினர்.

இதில் சென்னையை சேர்ந்த ஹேமலதா, விருதாசலத்தைச் சேர்ந்த வி. காயத்ரி, நாமக்கல்லைச் சேர்ந்த கோகிலவாணி ஆகிய மூன்று பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 மாணவிகள் காயமடைந்தனர். இந்தக் காட்சி தமிழகத்தையே கதிகலங்க வைத்தது.

இந்த சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் 2007 டிசம்பர் 5-ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் 25 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை தண்டனையும் விதித்து  தீர்ப்பளித்தது. வழக்கு விசாரணையின்போது ஒருவர் மரணமடைந்துவிட்டதால் அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை. 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து 28 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், 3 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தும், 25 பேருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்தும் 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை காலத்திலேயே தண்டனையை அனுபவித்துவிட்டதால் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். இந்த பஸ்ஸை எரித்த முதல் குற்றவாளியாக  சேர்க்கப்பட்ட  இதே டி.கே.ராஜேந்திரனை வேட்பாளராக அறிவித்துள்ளார் டிடிவி தினகரன். இதனால், அந்த தொகுதி அமமுகவினர் பயங்கர அப்செட்டில் உள்ளனர்.