தனது கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருக்கும்போது இடைஞ்சலாக இருந்த தனது குழந்தைக்கு அந்த பெண் உடல் முழுவதும் சூடு வைத்ததால் அந்த குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வருகிறது.

வேலூரை அடுத்த அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண். எலெக்ட்ரீசியன் வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி விசித்திரா. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த 26-ம் தேதி உடல் முழுக்க சூடு போட்ட கொப்பளங்களுடன் குழந்தையைத் தாய் விசித்திரா தூக்கிக்கொண்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

குழந்தையின் உடல்நிலை மிக மோசமாக இருந்ததால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்துவருகிறார்கள். குழந்தையின் பிறப்புறுப்பிலும் சூடுபோட்ட காயம் இருந்ததால் பாலியல் ரீதியான துன்புறுத்தலால் சம்பவம் நடைபெற்றதா? என மருத்துவர்கள் சந்தேகித்தனர்.

இதுதொடர்பாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் நிஷாந்தினியிடம் புகார் அளித்ததில், அவர், நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று குழந்தையைப் பார்வையிட்டார். பின்னர், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், குழந்தையின் தாய் விசித்திராவுக்கு வேறொரு ஆண் நண்பருடன் தொடர்பு இருப்பதும், இதனால் இவர்கள் உல்லாசமாக இருக்க தடையாக இருப்பதால் அந்த குழந்தையை துன்புறுத்தியிருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து, குழந்தையின் பெற்றோர் மற்றும் தாயுடன் நெருக்கமாக இருக்கும் அவர் நபர் ஆகிய மூன்று பேர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து கிடுக்கிப்பிடியாக தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.

மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த பெண் குழந்தையின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்துவருகிறார்கள். உடல் சுகத்துக்காக ஈவு இரக்கமற்ற இந்தக் கொடூர செயலை செய்த சம்பவம் பொதுமக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.