திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியைப் பின் தொடர்ந்ததைத் தட்டிக் கேட்ட இளம் பெண்ணின் தந்தையை வாலிபர் ஒருவர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த, மதனாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து என்பவர், பள்ளி மாணவியிடம் அடிக்கடி பின் தொடர்ந்து வந்து தொல்லை தந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
மாணவி இது தொடர்பாக தனது பெற்றோரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் இளைஞரின் வீட்டிற்குச் சென்று கண்டித்து விட்டு வந்துள்ளனர். இதனால் தனது காதல் விருப்பத்தை ஏற்க மறுத்த பள்ளி மாணவியின் தந்தையின் மீது ஆத்திரமடைந்த வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவியின் தந்தையை வழிமறித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் மாணவியின் தந்தைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


