திருவண்ணாமலை மாவட்டம், கொடையம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரும், ஈஸ்வரி என்ற பெண்ணும் காதலித்தார். இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் படிக்கும் போதிலிருந்தே பழக்கம், சுமார் 5 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். 

இருவரும் வேறு வேறு சாதி என்பதால்,  வீட்டிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால், ஈஸ்வரிக்கு அப்பா அம்மா கட்டாயப்படுத்தி கல்யாணம்  செய்து வைக்க பிளான் போட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கும் பக்கத்து ஊரைச்சேர்ந்த அவரது உறவினர் பையனுக்கும் கல்யாணம் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்திலேயே ஈஸ்வரி கட்டிய தாலியை அறுத்து எறிந்துவிட்டு, தனது காதலன் குமாரை அழைத்து கொண்டு, ஆரணியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவு கல்யாணம் செய்து கொண்டார். கல்யாணமான அன்றே  சென்னைக்கு சென்று குடியேறினார். 

இந்த விஷயம் ஈஸ்வரி வீட்டுக்கு தெரிந்ததையடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கொலை மிரட்டல் விட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, குமாரின் குடும்பத்தாரையும் ஊருக்குள் சேர்க்கக்கூடாது என்று ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும் ஒரு லட்சம் ரூபாய் அந்த குடும்பத்தினருக்கு அபராதமும் விதித்துள்ளனர்.

எனவே, ஊருக்குள் செல்ல கிராமத்தினர் விதித்த தடையை நீக்க வேண்டும் என்றும், கல்யாணமான தங்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்றும், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பியிடம் மணமக்களே நேரடியாக புகார் அளித்துள்ளனர்.