கலகலப்பு பட பாணியில் திருடச் சென்ற ஒரு இளைஞர் எக்ஸாஸ்ட் ஃபேன் ஓட்டையில் தலைகீழாக சிக்கிக்கொண்டார். வீட்டிற்கு வந்த தம்பதியினர் அவரைக் கண்டு போலீசுக்கு தகவல் அளிக்க, போலீசார் அவரை மீட்டு கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் திருடச் சென்ற இடத்தில், எக்ஸாஸ்ட் ஃபேன் (Exhaust Fan) வைப்பதற்கான சிறிய ஓட்டையில் சிக்கிக்கொண்டு திருடன் ஒருவன் கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டாவைச் சேர்ந்த சுபாஷ் குமார் ராவத் மற்றும் அவரது மனைவி ஞாயிற்றுக்கிழமை இரவு கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினர். வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்ற அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

சுவரில் எக்ஸாஸ்ட் ஃபேன் வைப்பதற்காக விடப்பட்டிருந்த சிறிய ஓட்டையில் ஒரு இளைஞர் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சுமார் 10 அடி உயரத்தில் இருந்த அந்த ஓட்டையில் அந்த இளைஞர் வசமாக சிக்கி இருந்தார். தலை மற்றும் கைகள் வீட்டிற்குள்ளும், கால்கள் வெளியேயும் தொங்கிய நிலையில் இருந்தார்.

சிக்கிக்கொண்டே மிரட்டிய திருடன்!

பயத்தில் கத்திய தம்பதியினர், "யார் நீ? இங்கே என்ன செய்கிறாய்?" என்று கேட்டனர். அதற்கு அந்த இளைஞர் கொஞ்சமும் கூச்சப்படாமல், "நான் திருடன்" என்று பதிலளித்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்த இக்கட்டான நிலையிலும் தம்பதியினரை அவர் மிரட்டியுள்ளார்.

"என் ஆளுங்க வெளியில தான் இருக்காங்க.. என்னை இப்படியே விட்டீங்கன்னா அவங்க வந்து உங்களை என்ன பண்ணுவாங்கன்னு தெரியாது. பேசாம என்னை விட்ருங்க!" என மிரட்டல் விடுத்துள்ளார்.

உடனடியாக ராவத் தம்பதியினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அந்தத் திருடனை மீட்கப் போராடினர். வெளியிலிருந்து ஒரு காவலரும், வீட்டிற்குள் இருந்து இரு காவலர்களும் அந்தத் இளைஞரை மெதுவாக இழுத்தனர். வலியால் அலறிய இளைஞர் ஒருவழியாக மீட்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய கார்

திருடப் போன இளைஞர் போலீசாரிடம் வசமாக மாட்டிக்கொண்டதை அறிந்த அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அவர்கள் வந்த காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

அந்தக் காரில் 'Police' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த கார் எப்படி அவர்களுக்குக் கிடைத்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.