கல்லூரி மாணவி குறித்து பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவு போட்டதால் மனவேதனையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள குறவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் மகள் ராதிகா, கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். ராதிகாவை அவரது அத்தை மகன் விக்னேஷ் காதலித்து வந்துள்ளனர். அதே ஊரில் வசிக்கும் பிரேம்குமார் என்பவருக்கும், ராதிகாவின் அத்தை மகன் விக்னேஷ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததால், இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் பழைய பகையை மனதில் வைத்து, பிரேம்குமார் பேஸ்புக்கில் ராதிகாவை திட்டி ஆபாசமாக பதிவு போட்டுள்ளார். 

இதை பார்த்த ராதிகாவும் அவரைத் திட்டி பதிவிட்டுள்ளார். இதனால் தனது உறவினர்களுடன் வந்து ராதிகா வீட்டிற்கு வந்த பிரேம்குமார் பிரச்னை செய்துள்ளார். அதேபோல ராதிகாவின் உறவினர்களும் பிரேம்குமார் வீட்டுக்குச் சென்று பிரச்னை செய்துள்ளனர். இதற்கிடையே பேஸ்புக் பதிவால் தொடர்ந்து மனவேதனையில் இருந்த ராதிகா,  தனது வீட்டில் யாருமில்ல நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், ராதிகா தற்கொலை தகவல் அறிந்த அவரின் அத்தை மகன் விக்னேஷ் ,  ராதிகாவைப் பிணமாக  பார்க்க மனமில்லாமல் வரும் வழியில் செங்கால்பாளையம் கிராமத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். விக்னேஷ் உடல் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையிலும்,  ராதிகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் பதிவால் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசாஸார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை தேடி வருகின்றனர்.  

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 10 மணியளவில் ராதிகா உறவினர்கள் பிரேம்குமாரை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட போது மர்ம நபர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் செய்தியாளர்கள் சிலர் காயமடைந்தனர். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் மீண்டும் ராதிகா உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். மேலும் அந்தப் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.