சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் அருகே முசுண்டப்பட்டி- துவரங்குறிச்சி சாலையில் ஒரு பாலத்தின் கீழே ஆண் பிணம் கிடப்பதாக புழுதிப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று, அங்கு கிடந்த உடலை மீட்டு பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், இறந்து கிடந்தவர் வலசைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகையா என்பதும், கொத்தனாராக அவர் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இது குறித்து புழுதிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகையா சாவுக்கான பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தில் முருகையா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

முருகையாவின் மனைவி மணிமேகலைக்கும் முருகையாவின் தம்பி பிச்சமணிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது குறித்து தெரிய வந்ததால் முருகையா தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

முருகையா உயிரோடு இருக்கும் வரை கள்ளக்காதலை தொடர முடியாது என்று கருதி, அவரை தீர்த்துக்கட்டும் சதித்திட்டத்தை மணிமேகலையும், பிச்சமணியும் தீட்டியதாக தெரியவருகிறது. 

அண்ணியுடனான கள்ளக்காதலை தொடர உடன் பிறந்த அண்ணன் என்றும் பாராமல் முருகையாவின் கழுத்தை நெரித்து பிச்சமணி கொன்றதாகவும் தெரியவருகிறது. பின்னர் அவரது உடலை 2 பேரும் சேர்ந்து அங்குள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கிவந்து, ரோட்டோரம் உள்ள ஒரு பாலத்திற்கு அடியில் போட்டுச் சென்றுள்ளனர்.

இதை தொடர்ந்து பிச்சமணி மற்றும்  மணிமேகலையை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட முருகையாவுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை கொலை செய்யப்பட்டதாலும், தாயார் ஜெயிலில் அடைக்கப்பட்டதாலும் அந்த 4 பிள்ளைகளும் தற்போது அநாதைகளாக உள்ளனர்.