குமரியில் இருசக்கர வாகனத்தில் ரகசிய கேமரா பொருத்தி பெண்கள் குளிப்பதை படம் எடுத்த இளைஞரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கால்வாய்களில் தோவாளை கால்வாயும் ஒன்று. பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்டு உள்ள தண்ணீர் இந்த கால்வாயில் தற்போது அதிக அளவு வந்து கொண்டிருக்கிறது. இதில், தினமும் காலை, மாலை நேரங்களில் இந்த கால்வாயில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இந்நிலையில், தோவாளை கால்வாயில் பகுதியில் கடந்த சில நாட்களாவே பெண்கள் குளிக்கும் நேரத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டு இருக்கும். அந்த இருசக்கர வாகனம் அருகே அடிக்கடி ஒரு இளைஞர் வருவதும், செல்வதுமாக இருந்து வந்தார். பெண்கள் குளித்துவிட்டு சென்ற பிறகு அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார். ஒரே பதிவெண் கொண்ட இருசக்கர வாகனம் பெண்கள் குளிக்கும் நேரத்தில் மட்டும் நிறுத்தப்படுவது பெண்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதனால் அவர்களும் அது பற்றி கண்காணித்து வந்தனர். 

இந்நிலையில், வழக்கம் போல இன்றும் இருசக்கர வாகனம் அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. வழக்கம்போல அந்த இளைஞர் அடிக்கடி இருசக்கர வாகனம் அருகே வந்து சென்றபடி இருந்தார். இவைற்றையெல்லாம் கண்காணித்திருந்தவர்கள் இளைஞரை மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் வலுத்தது. பின்னர், அவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்து பார்த்தனர்.

 

அப்போது இருசக்கர வாகனத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த கேமிரா கால்வாயில் குளிக்கும் பெண்களை படம் எடுக்கும் கோணத்தில் அமைக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, பொதுமக்கள் அந்த இளைஞருக்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ரகசிய கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது அதில் பல பெண்கள் குளிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து, அந்த இளைஞரை கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.