பெங்களூவில் புத்தாண்டை கணவரோடு கொண்டாடியபோது பெண் ஒருவர் பாலியல் சீண்டலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று நள்ளிரவில் உலகம் முழுவதும் கலைகட்டியது. ஆண்களும் பெண்களும் பேதம் இன்றி கோலகல உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் பெங்களூரு மாநகரில் எம்ஜி ரோடு பகுதியில் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கணவருடன் ஒரு பெண்ணும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அங்கு ஆண்களும், பெண்களும் கூடி நின்று, புத்தாண்டை வரவேற்றார்கள். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி காமுகர்கள், அங்கு வரும் பெண்களின் உடலில் கண்ட இடங்களையும் தொடுவது, சீண்டுவது என ஈடுபட்டனர்.

ஜெயநகரை சேர்ந்த கணவரும், மனைவியும், எம்ஜிரோடு பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். கொண்டாட்டங்கள் நிறைவடைந்து நள்ளிரவு 1 மணியளவில், அவர்கள் அருகேயுள்ள ரிச்மண்ட் சர்க்கிள் பகுதிக்கு வந்தபோது, மூன்று குடிகாரர்கள், வழிமறித்து, அந்த பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர். தட்டிக்கேட்ட கணவரை தாக்கி, அவரிடமிருந்த பணம், செல்போன் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டு தப்பினர். இந்த சம்பவம் குறித்து பெங்களூரு அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் எம்.ஜி ரோடு பகுதியில் பாலியல் ரீதியான இதேபோன்ற புகார் காவல் நிலையத்தில் பதிவாகின. அதேபோல் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திலும் அத்துமீறல் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.