பழனி காந்தி மார்க்கெட்டில் மளிகை, இறைச்சி மற்றும் காய்கறி கடைகள் உள்ளன. இங்குள்ள கடைகளுக்கு சென்னை, பெங்களூரு, கோவை, திண்டுக்கல் என பல்வேறு ஊர்களில் இருந்து வேன், லாரிகளில் சரக்குகள் வருவது வழக்கம். 

அதன்படி நேற்று காலையில் காந்தி மார்க்கெட் பகுதியில் சரக்குடன் வேன் ஒன்று நின்றது. இதையடுத்து அங்குள்ள கடைக்காரர்கள் வேனில் பார்த்தபோது, இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே அதன் டிரைவர் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து பழனி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். 

அதில் இறந்தவர் பெங்களூருவை சேர்ந்த சிவான்னா என்பதும், பெங்களூருவில் இருந்து சரக்குகளை ஏற்றி பழனிக்கு வந்த நிலையில் வேனை ஓட்டியபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததும் தெரியவந்தது. 

மேலும் மக்கள் மீது வேன் மோதாமல் இருக்க அவர் சாலையோரமாக வேனை நிறுத்தி இருந்தார்.

பின்னர் அவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட் பகுதியில், வேன் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர்பிரியும் தருவாயிலும், மக்கள் மீது வேன் மோதிவிடக் கூடாது என்பதற்காக சாதுர்யமாக செயல்பட்டு, வேனை சாலையோரமாக நிறுத்திய டிரைவரின் செயல் அப்பகுதி வியாபாரிகள், மக்களை  சோகமடைய செய்தது.