Asianet News TamilAsianet News Tamil

ஓடும் ரயிலில் கொள்ளை… ஓராண்டுக்குப் பின் சிக்கிய குற்றவாளிகள் !!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓடும் ரயிலில் 5 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், ஓராண்டுக்குப் பின்னர் 2 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்..

train robbery aqiuest arrest
Author
Chennai, First Published Oct 13, 2018, 10:25 PM IST

சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.323 கோடி பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து ரெயில் மூலம் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்ட ரெயில் மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைந்தது. பின்னர் பணம் இருந்த பெட்டி மட்டும் சேத்துப்பட்டு பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பெட்டியை திறந்து பார்த்தபோது, மேற்கூரையில் துவாரமிட்டு ரூ.5 கோடியே 78 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்தது தெரிந்தது. இந்த கொள்ளை தொடர்பாக சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

train robbery aqiuest arrest

ஓடும் ரெயிலில் ஏறி கொள்ளையடித்தால் கைரேகை பல இடங்களில் பதிவாகி இருக்கும். ஆனால் ரெயில் பெட்டியில் ஒரு சில பகுதிகளில் தான் கைரேகை இருந்தது. இதுதவிர ஓடும் பெட்டியில் ஏறினாலோ, கீழே இறங்கினாலோ கால் தடம் மற்றும் கைரேகைகள் பல இடங்களில் நிச்சயம் பதிந்து இருக்கும். ஆனால் கால் தடம், கை ரேகை பல இடங்களில் இல்லை.

ஒரு சில கைரேகை மட்டுமே உள்ளதால் வங்கி பணம் ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்கவில்லை என்றும், ரெயில் நின்று இருக்கும் போது தான் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிய வந்தது.

இந்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா அளித்த தகவலின் அடிப்படையில், இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டது.  சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் 350 கி.மீட்டர் தூரத்தை செயற்கை கோள் மூலம் புகைப்படங்களாக நாசா அனுப்பியது. மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக நாசாவுக்கு சிபிசிஐடி வைத்த கோரிக்கையை ஏற்று நாசா படங்களை அனுப்பியது. நாசா படங்களின் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களின் அழைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.  
train robbery aqiuest arrest
இந்த நிலையில்,  ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை கொள்ளையடித்த வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ், ரோஹன் பார்த்தி ஆகியோரை  சிபிசிஐடி போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.  

சின்ன சேலத்திற்கும், விருதாசலத்திற்கும் இடையே ரயில் பெட்டி மேற்கூரையை துளையிட்டு கொள்ளையடித்ததாக கைதானவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.  கொள்ளையடித்த பழைய ரூபாய் நோட்டுகளை லுங்கியில் சுற்றிக்கொண்டு 2 கொள்ளையர்கள் தப்பியுள்ளனர். ரயில் விருதாசலம் வந்தபோது பணக்கட்டுகளை மற்ற கூட்டாளிகளிடம் தந்துள்ளனர்.  ரயில் நிலையத்தில் இறங்கி காத்திருந்த மேலும் ஐந்து பேருடன்  மத்திய பிரதேசம் தப்பி சென்றதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்

Follow Us:
Download App:
  • android
  • ios