திருவனந்தபுரம் அருகே காதலியை கழுத்தை அறுத்து கொன்ற காதலன் தன்னை தானே குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருவனந்தபுரம் அருகே வெள்ளறடையை அடுத்த காரக்கோணம் குன்னுவிளா பகுதியை சேர்ந்தவர் அஜீத். இவர் பெயிண்டராக உள்ளார். இவரது மனைவி சீமா. இந்த தம்பதியின் மகள் ஆஷிகா (21). அவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது, செல்போன் கடையில் பழுதுபார்க்கும் பயிற்சி பெற்று வந்த அனு (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்ததும் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, காதலை கைவிடும்படி பெற்றோர் மகளை கேட்டுக்கொண்டனர். ஆனாலும், காதலர்கள் இருவரும் ரகசியமாக சந்தித்து பேசி வந்தனர். இதையறிந்த ஆஷிகாவின் பெற்றோர் தங்கள் மகளை மீண்டும் கண்டித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், காதலன் அனுவை போலீசார் எச்சரித்து அனுப்பினர். 

இதன் பிறகு மீண்டும் அனு தனது காதலி ஆஷிகாவை சந்திக்க முயன்றபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். பலமுறை முயற்சி செய்தும் ஆஷிகா மறுத்துவிட்டதால் அனு ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து, ஆஷிகாவின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நேரத்தில் அவரது பாட்டியும் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். கத்தியுடன் ஆவேசமாக வீட்டிற்கு வந்த அனு தன்னை தடுக்க முயன்ற ஆஷிகாவின் பாட்டியை கீழே தள்ளினார்.

பின்னர், ஆஷிகாவை கொடூரமாக குத்திவிட்டு தானும் அந்த கத்தியால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து, ஆஷிகாவும், அனுவும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பாதி வழியிலேயே காதலர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக வெள்ளறடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.