வீட்டில் உள்ள அறையில் அடைத்து வைத்து 3மணி நேரமாக பெண் ஒருவர் தாக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த பெண்ணின் கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்
கணவன்- மனைவி இடையே சண்டை
பெங்களூரு தலகத்தாபுரா பகுதியை சேர்ந்தவர் மாரப்பா(55) இவருக்கும் இவரது மனைவி பத்மா (45) இருவருக்கும் இடையே கடந்த பல வருடங்களாக தொடர்ந்து சண்டை ஏற்பட்டு வருகிறது. பத்மா மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இருவருக்கு இடைவே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக பல முறை உறவினர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்துள்ளனர். இருந்த போதும் பிரச்சனை அதிகமானதாகவே தெரிகிறது. இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே சண்டை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வீட்டில் சமைக்க கூட முடியாமல் பத்மா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். வீட்டில் இருந்த பத்மாவை, கதை பூட்டிவிட்டு பல மணி நேரமாக மாரப்பா தாக்கியுள்ளார். இதில் பத்மா மயக்கமுற்று இறந்துள்ளார்.

தாய் உயிரிழப்பு- மகன் புகார்
இது சம்பவம் தொடர்பாக பத்மாவின் மகன் கிரிஷ் காவல்நிலையத்தில் தனது தந்தை மீது புகார் தெரிவித்துள்ளார். அதில் தனது தாயை தனது தந்தை கட்டையால் தொடர்ந்து அடித்ததாகவும், இதனால் தனது தாய் மிகவும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். தனது தந்தை வீட்டின் கதவை உள்ளே இருந்து பூட்டி விட்டு தாக்கியதால் தன்னாலும், வீட்டின் அருகே இருந்தவர்களாளும் தடுக்க முடியவில்லையென கூறினார். இதனையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்த்தாகவும் காவல்துறையினர் வந்து கதவை திறந்த போது தனது தாய் இறந்து கிடந்ததாக தெரிவித்துள்ளார். தனது தந்தை கதவை திறந்து இருந்தால் தனது தாயை காப்பாற்றி இருக்கலாம் எனவும் கிரிஷ் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் மாரப்பாவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
