பெரம்பலூர், கவுள்பாளையம், கலை நகரில் வசிப்பவர் ராஜ் மகன் தனபால் (24). இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்து வருகிறார். 

இவர் அதே பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தனபால் அந்த சிறுமியை அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தந்தை, தனபாலின் பெரியப்பாவான செல்வம் என்பவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து தனபாலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தனபால், நேற்று முன்தினம் இரவு சிறுமியின் வீடு இருக்கும் தெருவில் குறுக்கும் நெடுக்குமாக போய் வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் தனபாலை திட்டி அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து சிறுமியின் தந்தையும், அவரது பெரியப்பாவும் சேர்ந்து, தனபால் வீட்டிற்கு நேரில் சென்று அவரது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர். 

திடீரென தனபால், சிறுமியின் தந்தை மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது தனபால் அருகே நின்று கொண்டிருந்த அவரது தம்பி நந்தகுமார் அதனை தடுத்து நிறுத்தியுள்ளார்.இது குறித்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர காவல் துறையினர், தனபாலை கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து 23 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க : TN Corona : தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு..? முதல்வர் மு.க ஸ்டாலின் விரைவில் ஆலோசனை.!