சென்னை பள்ளிக்கரணை அருகே இருக்கும் மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(59). பூசாரியான இவர் அண்ணா சாலையில் இருக்கும் ஒரு அம்மன் கோயிலில் பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் அதே பகுதியில் ரேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 10 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். ஒரே பகுதியில் வசிப்பதால் சிவகுமார் சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக வீட்டின் அருகே சிறுமியிடம் பேச்சுக் கொடுத்த சிவகுமார் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து இருக்கிறார். அதிர்ச்சி அடைந்த சிறுமி உடனடியாக அங்கிருந்து தனது வீட்டிற்கு தப்பியோடினார்.

பின் தனது பெற்றோரிடம் சிவகுமார் செய்தவற்றை அழுதுகொண்டே தெரிவித்திருக்கிறார். செய்வதறியாது திகைத்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவக்குமாரை தீவிரமாக தேடிவந்தனர். இதனிடையே நேற்று அதிகாலையில் அவர் தனது வீட்டிலிருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயற்சித்திருக்கிறார். அதை கண்ட சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

விரைந்து வந்த போலீஸார் சிவகுமாரை சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர். காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிறுமியிடம் தவறாக நடந்ததை சிவகுமார் ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார்.  சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கோவில் பூசாரி ஒருவர் சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது